
குஜராத் மற்றும் அதை ஒட்டி இருக்கும் ராஜஸ்தான் பகுதிகளில் மூளை அழற்சி நோயால் கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பாண்டின் தென்மேற்குப் பருவ மழைக்காலத்தில் மட்டும் குஜராத் மாநிலத்தில் 164 நபர்கள் மூளை அழற்சி பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பாதிப்புக்கு ஆளானவர்களில் சுமார் 101 நபர்கள் வரை உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த நபர்களில் 28 பேர் சண்டிபுரா வைரஸ் தொற்றாலும், 73 பேர் பிற வைரஸ் தொற்றாலும் பாதிக்கப்பட்டனர்.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்குத் தகுந்த நேரத்தில் உரிய சிகிச்சைகள் வழங்கப்படாவிட்டால் 24 மணி நேரத்துக்குள்ளாகவே மூளை சாவு ஏற்படும் அபாயம் உள்ளது.
அதிலும் வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்களிடையே இருக்கும் குறைவான விழிப்புணர்வும், இந்த பாதிப்புக்கான தகுந்த சிகிச்சையை வழங்கும் நோக்கில் சிறப்பு மருத்துவர்கள் இல்லாததும் உயிரிழப்புகளை அதிகரிக்கின்றன. வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்குக் காய்ச்சலும், கடுமையான தலைவலியும், உடல் சோர்வும் ஏற்படும்.
டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதித்தாலும், மூளை அழற்சி நோய் பெரும்பாலும் குழந்தைகளையே அதிகமாகப் பாதிக்கிறது. கொசுக்கள், மணல் ஈக்கள், உண்ணிகள் போன்றவற்றிலிருந்து இந்த நோய்கள் அனைத்தும் பரவுகின்றன.
இத்தகைய நோய்களின் பரவலுக்குக் காரணமாக விளங்கும் கொசுக்கள், மணல் ஈக்கள் போன்றவற்றின் வளர்ச்சிக்கான பங்களிப்பை அதிகப்படியான வெப்பநிலையும், ஈரப்பதமும் வழங்குகின்றன. மேலும், காலநிலை மாற்றத்தால் இந்த நோய்களின் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
உதாரணமாக மலேரியா பாதிப்பை ஏற்படுத்தும் ஒட்டுண்ணியின் அடைகாக்கும் காலத்தை, காலநிலை மாற்றம் வெகுவாகக் குறைத்துள்ளது. அதிலும் நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகள் நீர் நிலைகளில் வளரும்போதே அவற்றை கட்டுப்படுத்துதல் மிக அவசியம்.
இந்த ஒட்டுண்ணிகள் நீர்நிலைகளை தாண்டி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நகரும் பட்சத்தில் அவற்றின் பரவல் மிக வேகமாக இருக்கும். எனவே பொது இடங்களிலும், வீடுகளைச் சுற்றி இருக்கும் இடங்களிலும் நீர் தேங்காதவாறு சுகாதாரமான முறையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது மிக அவசியமாகும்.
நோய் பாதிப்பைக் குறைக்க, இது குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை அளிப்பதும் மிக முக்கியமான நடவடிக்கையாகும்.