கடந்த ஒராண்டில் இந்திய இளைஞர்களிடையே நிலவிய வேலையில்லா திண்டாட்டம் குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2023 முதல் ஜூன் 2024 வரையிலான காலகட்டத்தின் தொழிலாளர் கணக்கெடுப்பு (பி.எல்.எஃப்.எஸ்.) ஆய்வறிக்கையை கடந்த செப்.23-ல் வெளியிட்டது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம். இதன்படி கடந்த ஓராண்டில் நாட்டிலேயே வேலையில்லா திண்டாட்டம் கேரளா மாநிலத்தில் உச்சபட்டமாக இருந்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் கேரள மாநிலத்தின் 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களில், 29.9 சதவீதத்தினர் வேலையின்றி இருந்துள்ளனர். இந்தப் பட்டியலில் கேரளாவைத் தொடர்ந்து அடுத்த 4 இடங்களை நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.
இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் கடந்த ஓராண்டில் தமிழகத்தைச் சேர்ந்த 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களில், சுமார் 15.3 சதவீதத்தினர் வேலையின்றி இருந்துள்ளனர். குறிப்பாக ஊரகப் பகுதி இளைஞர்களில் 15.7 சதவீதத்தினரும், நகரப் பகுதி இளைஞர்களில் 14.9 சதவீதத்தினரும் வேலையின்றி இருந்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் இந்தியாவின் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சராசரியாக இரட்டை இலக்கத்தில் வேலையில்லா திண்டாட்டம் நிலவியுள்ளது. மேலும் கடந்த ஓராண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 15 முதல் 29 வயது வரையிலான இந்திய இளைஞர்களில் 10.2 சதவீதத்தினர் வேலையின்றி இருந்துள்ளனர்.