
தனது அரசியல் வாரிசாக முன்பு அறிவிக்கப்பட்ட தன் தம்பி மகன் ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி.
4 முறை உ.பி. முதல்வர் பொறுப்பு வகித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, கடைசியாக 2012-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தார். அதன்பிறகு 2017 மற்றும் 2022-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சியால் சோபிக்க முடியவில்லை.
குறிப்பாக, 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து, 10 டிசம்பர் 2023 அன்று தன் தம்பி ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்தார்.
தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஆகாஷ் ஆனந்த் தலைமையில் 2024 மக்களவைத் தேர்தலை சந்தித்து படுதோல்வி அடைந்தது பகுஜன் சமாஜ் கட்சி. அதன்பிறகு அத்தகைய பொறுப்பை வகிக்க முதிர்ச்சி அவசியம் என்று கூறி கடந்த 7 மே, 2024-ல் தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ஆகாஷ் ஆனந்தை நீக்கினார் மாயாவதி.
இருப்பினும் மீண்டும் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஆகாஷ் ஆனந்த் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆகாஷ் ஆனந்தை நீக்கி இன்று உத்தரவிட்டுள்ளார் மாயாவதி. மாநிலங்களவை எம்.பி. ராம்ஜி கௌதமையும், தன் தம்பி ஆனந்த் குமாரையும் புதிய தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக அவர் நியமித்துள்ளார்.
அண்மையில் கட்சியின் மூத்த தலைவரும், ஆகாஷ் ஆனந்தின் மாமனாருமான அஷோக் சித்தார்த்தை கட்சியில் இருந்து நீக்கினார் மாயாவதி. அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி அமைப்பை பலவீனப்படுத்தும் வகையில் பல பிரிவுகளை உருவாக்கி, அசோக் சித்தார்த் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், அஷோக் சித்தார்த்தால் ஆகாஷ் ஆனந்தின் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக இன்று கருத்து தெரிவித்துள்ளார் மாயாவதி. மேலும், தாம் உயிரோடிருக்கும் வரை தனக்கு யாரும் வாரிசு என்று யாரும் கிடையாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.