
ரூ. 2,700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சோனாமார்க் சுரங்கப்பாதையை ஜம்மு-காஷ்மீரில் நாளை (ஜன.12) திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
குளிர்காலங்களில் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியிலிருந்து லடாக்கின் கார்கில் பகுதியைச் சென்றடைவது சவான காரியமாகும். குளிர்காலங்களில் ஏற்படும் அதிகப்படியான பனிப்பொழிவு மற்றும் அதை ஒட்டி ஏற்படும் நிலச்சரிவால் இந்தப் பகுதியில் பயணம் மேற்கொள்வதும், அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வதும் தொடர்ந்து தடைபட்டுவந்தது.
எனவே ஸ்ரீநகருக்கும், கார்கிலுக்கும் இடையே தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், கந்தெர்பால் மாவட்டத்தின் ககன்கிர் பகுதியில், சோனாமார்க் சுரங்கப்பாதை கட்டும் பணி கடந்த 2015-ல் தொடங்கியது. கடல்மட்டத்திலிருந்து சுமார் 8,650 அடி உயரத்தில், ரூ. 2,700 கோடி பொருட்செலவில் உருவாகிவந்த இந்த சுரங்கப்பாதையின் கட்டுமானம் சமீபத்தில் நிறைவுபெற்றது.
6.5 கி.மீ. தொலைவிலான இந்த சுரங்கப்பாதையைக் கடக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைக்கு மறுபுறம் சோனாமார்க் சுற்றுலா வஸ்தலம் உள்ளது. இந்த சுரங்கப்பாதை மூலம், பாதுகாப்பான முறையில், ஆண்டு முழுவதும் எளிதில் அணுகக் கூடிய சுற்றுலா தலமாக சோனாமார்க் உருவாகும்.
ஏற்கனவே குளிர்காலச் சுற்றுலா, சாகச விளையாட்டுகள் சுற்றுலா ஆகியவற்றுக்கு சோனாமார்க் பிரசித்தி பெற்ற இடமாகும். அவற்றை முன்வைத்து, சுரங்கப்பாதை திறப்புக்குப் பிறகு அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
இந்நிலையில், இந்த சுரங்கப்பாதையை நாளை (ஜன.12) பொதுப் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த சோனமார்க் சுரங்கப்பாதை திறப்பு விழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக தன் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளார் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா.