உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் அறிவுறுத்தலின் பெயரில், கண்கள் கட்டப்படாத புதிய நீதி தேவதையின் சிலை உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
வழக்கமாக இந்திய நீதிமன்றங்களில் உள்ள நீதி தேவதையின் சிலைகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும். மேலும் நீதி தேவதையின் ஒரு கையில் தராசும், மறு கையில் வாளும் இருக்கும். இந்த நீதிதேவதை சிலைகள் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக் காலத்தின்போது பயன்பாட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
பணம், பதவி, அதிகாரம் போன்ற எதற்கும் சார்பாக இல்லாமல் நீதி வழங்கும்போது நீதிபதிகள் நடுநிலையுடன் செயல்படவேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. மேலும் சமநிலை மற்றும் நேர்மையை வெளிப்படுத்தும் நோக்கில் தராசும், சட்டத்தின் ஆற்றலை வெளிப்படுத்தும் நோக்கில் வாளும் நீதி தேவதையின் கைகளில் இருந்தன.
இந்நிலையில் காலனி ஆட்சியின் அடையாளங்கள் மாற்றும் வகையில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் அறிவுறுத்தலின் பேரில் நீதி தேவதையின் புதிய சிலை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நூலகத்தில் இன்று வைக்கப்பட்டுள்ளதாக என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய நீதி தேவதையின் சிலையில் அதன் கண்கள் கட்டப்படவில்லை. சிலையின் ஒரு கையில் தராசும், மறு கையில் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் உள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின்படி நீதி வழங்கப்படுகிறது என்பதை இது குறிக்கிறது. அதேநேரம் புதிய சிலையில் தராசு உயர்த்திப் பிடிக்கப்பட்ட நிலையில் உள்ளது.