பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்களுக்கு அதிகபட்சம் மரண தண்டனை வரை விதிக்கும் சட்ட மசோதாவை மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று (செப்.03) தாக்கல் செய்துள்ளது மமதா பானர்ஜி தலைமையிலான அரசு.
மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிரான சட்டமசோதா, `அபரஜிதா பெண் மற்றும் குழந்தை மசோதா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் அல்லது குழந்தை இறந்துவிட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் விதிக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவைத் தாக்கல் செய்து, நிறைவேற்றுவதற்காக இரண்டு நாட்கள் (செப் 02-03) மட்டுமே நடைபெறும் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது மேற்கு வங்க அரசு.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்செயல்கள் மாநிலத்தில் நடைபெறுவதைத் தடுக்கும் வகையிலும், அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை மாநிலத்தில் உருவாக்கும் வகையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமலான பிறகு, ஒவ்வொரு மாவட்டத்திலும் `அபரஜிதா குழு’ நியமிக்கப்படும். துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் செயல்படும் இந்தக் குழு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்ற வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்.
இந்த சட்டத்தின் கீழ் பதியப்படும் குற்றவழக்குகளின் விசாரணை 21 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்பட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்காக பிரத்தியேகமாக 52 சிறப்பு நீதிமன்றங்கள் அமைய இருக்கின்றன.