
தடுப்பூசி செலுத்தியிருப்பதால், கொரோனா நோய்த் தொற்றைக் கண்டு பயப்பட வேண்டாம் என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு இந்தியா முழுக்க நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீண்டும் முகக் கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஆங்காங்கே பார்க்க முடிகிறது. கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர் என்ற தரவுகள் எல்லாம் தினந்தோறும் வெளியாகி வருகின்றன. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மாநில வாரியான தரவுகளை வெளியிட்டு வருகிறது.
இதன்படி, இந்தியாவில் புதிதாக 363 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிகபட்சமாக மேற்கு வங்கததில் 82 பேரும், கேரளத்தில் 64 பேரும் குஜராத்தில் 55 பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் புதிதாக 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியா முழுக்க கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,758. தமிழ்நாட்டில் மட்டும் 199 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.
எனினும், கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டு பயப்பட வேண்டாம் என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"நமக்கு ஏற்கெனவே இருக்கும் எதிர்ப்புச் சக்தி காரணமாக நாம் பயப்பட வேண்டாம். எல்லோரும் தடுப்பூசி செலுத்தியிருக்கிறோம். பலர் இரு தடுப்பூசிகளைச் செலுத்தியிருக்கிறோம். சிலர் மூன்றாவது தடுப்பூசியைச் செலுத்தியிருக்கிறார்கள். இதனால் நமக்கு இருக்கும் எதிர்ப்புச் சக்தியால், கொரோனா வந்தாலும் அது லேசான பாதிப்பையே உண்டாக்கும். இரு நாள்கள் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடம்பு வலி... அந்த மாதிரி வந்துவிட்டு சென்றுவிடும்.
இதுவரை மக்களைத் தீவிரமாகப் பாதிப்பதாக அறிகுறிகள் இல்லை. இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் முகக் கவசம் அணிந்து வெளியில் செல்வது நல்லது. காரணம், மற்றொருவருக்குத் தொற்று ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ளலாம்.
வயதானவர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள், நுரையீரல் அல்லது இருதய நோய் இருப்பவர்களுக்கு எந்தப் பாதிப்பு வந்தாலும் அது தீவிரமாக இருக்க வாய்ப்பு அதிகம். எனவே, அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது நல்லது. நம் அனைவருக்கும் தெரியும். முகக் கவசம் அணிவது, வெளியில் சென்று வந்தால் கைகளை நன்றாகக் கழுவுதல், பொது இடங்களில் துப்பாமல் இருப்பது... இவையெல்லாம் பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். இதை எப்போதும் பின்பற்றுவது நல்லது. வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிவது நல்லது. ரயில், பேருந்து, விமானத்தில் இருமிக்கொண்டு இருந்தால், அருகிலிருப்பவர்களுக்கும் அதே தொற்று ஏற்படலாம். அது கொரோனா தொற்றாக இருக்கலாம், வேறு தொற்றாகக் கூட இருக்கலாம்" என்றார் சௌமியா சுவாமிநாதன்.