சந்தேகத்தைக் கிளப்புவதற்கான முயற்சிகள் நடக்கின்றன: தலைமைத் தேர்தல் ஆணையர்

"எதற்காக சந்தேகங்களை எழுப்புதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நிச்சயமாக ஒரு நாள் வெளிக்கொண்டு வருவோம்."
சந்தேகத்தைக் கிளப்புவதற்கான முயற்சிகள் நடக்கின்றன: தலைமைத் தேர்தல் ஆணையர்
ANI

தேர்தல் நடைமுறை மீது சந்தேகத்தைக் கிளப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

6 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 58 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தில்லியில் இன்று வாக்களித்தார். அப்போது படிவம் 17சி தரவுகளைப் பதிவேற்றம் செய்வது தொடர்புடைய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்துப் பேசினார்.

படிவம் 17சி தரவுகளை தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுப்பு தெரிவித்தது.

இந்தத் தீர்ப்பு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது:

"சந்தேகத்தை எழுப்புவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எதற்காக சந்தேகங்களை எழுப்புதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நிச்சயமாக ஒரு நாள் வெளிக்கொண்டு வருவோம். மக்கள் எப்படி தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்பதைக் காட்டுவோம். வாக்கு இயந்திரங்கள் சரியாக வேலை செய்வதில்லை, பதிவான வாக்கு விவரங்கள் தவறாக உள்ளன, பதிவான வாக்குகள் மாற்றப்படுகின்றன என்பது போன்ற சந்தேகங்களுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று பதிலளித்துவிட்டது. நாங்களும் எங்களுடையப் பதிலை அளிப்போம்.

இந்த முறை வாகுப்பதிவில் அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்பதற்காக நிறைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அனைவரும் வந்து வாக்களித்துள்ளார்கள். நாடு முழுக்க வாக்குப்பதிவு சிறப்பாக உள்ளன. வெயிலுக்கு மத்தியிலும் வாக்குப்பதிவு நன்றாக உள்ளன" என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in