எங்கு ஆட்சியமைத்தாலும் இடஒதுக்கீட்டின் 50% உச்ச வரம்பு நீக்கப்படும்: ராகுல் காந்தி

"லேசான அழுத்தத்தைக் கொடுத்தால், மோடி முற்றிலுமாகச் சரணடைந்துவிடுவார் என்பது அன்றே தெரியும்."
எங்கு ஆட்சியமைத்தாலும் இடஒதுக்கீட்டின் 50% உச்ச வரம்பு நீக்கப்படும்: ராகுல் காந்தி
1 min read

காங்கிரஸ் எங்கு ஆட்சியமைத்தாலும் இடஒதுக்கீட்டின் 50% உச்ச வரம்பு நீக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிஹாரின் நாலந்தாவில் அரசியலமைப்புப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராகுல் காந்தி இடஒதுக்கீட்டின் உச்ச வரம்பை காங்கிரஸ் எங்கு ஆட்சியமைத்தாலும் நீக்கும் எனப் பேசினார்.

ராகுல் காந்தி கூறியதாவது:

"சாதிவாரி கணக்கெடுப்பு தான் என் இலக்கு. மக்களவையில் மோடியின் முன்னிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றேன். அவருக்கு சரணடையும் வழக்கம் உள்ளது. லேசான அழுத்தத்தைக் கொடுத்தால், அவர் முற்றிலுமாகச் சரணடைந்துவிடுவார் என்பது அன்றே தெரியும். அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் நாட்டின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காகவும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த நான் போராடி வருகிறேன். வரும் காலங்களில் நாங்கள் எங்கு ஆட்சியமைத்தாலும் இடஒதுக்கீட்டில் 50% உச்ச வரம்பு நீக்கப்படும். இது பிஹாரிலிருந்து தொடங்கும்.

இவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நேர்மையாக நடத்த மாட்டார்கள். காரணம், சாதிவாரி கணக்கெடுப்பை நேர்மையாக நடத்தினால், அவர்களுடைய அரசியல் முடிவுக்கு வந்துவிடும். அரசின் சாதிவாரி கணக்கெடுப்பில் கேள்விப் பட்டியலை இறுதி செய்யும் குழுவில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் இருப்பார்களா எனத் தெரியவில்லை" என்றார் ராகுல் காந்தி.

இந்தியா, பாகிஸ்தான் பிரச்னையை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருவதற்கு பிரதமர் மோடி எதிர்வினை ஆற்றாதது குறித்தும் ராகுல் காந்தி விமர்சித்தார்.

"இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதியை நிலைநாட்டியது நான்தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுவது பற்றி பிரதமர் மோடி மௌனம் காக்கிறார். டிரம்ப் இதை 11 முறை சொல்லியிருக்கிறார். பிரதமர் மோடியால் இதற்கு எதிர்வினை ஆற்ற முடியவில்லை. டிரம்ப் பொய் சொல்கிறார் என எதுவும் கூற முடியவில்லை. காரணம், அது தான் உண்மை" என்றார் ராகுல் காந்தி.

முன்னதாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027-ல் தொடங்கப்படும் என்றும், முதல்முறையாக மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு கடந்த ஜூன் 4-ல் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in