
மஹாராஷ்டிரத்தில் மஹா விகாஸ் அகாதி (எம்விஏ) இடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளதாக மஹாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் தாக்கரே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) ஆகிய கட்சிகள் தலா 85 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இன்று மாலை அல்லது நாளை இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் நானா படோல் புனேவில் இன்று தெரிவித்தார்.
மஹா விகாஸ் அகாதியின் முதல்வர் வேட்பாளராக நானா படோல் அறிவிக்கப்படுவாரா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த அவர், "எங்களுடைய அரசை அதிகாரத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களுடைய முதல் பொறுப்பு. அதன்பிறகு, எங்களுடையக் கட்சி மேலிடம் முடிவு செய்யும். மஹாராஷ்டிரத்தைப் பாதுகாக்க வேண்டும்" என்றார் நானா படோல்.
மூன்று கட்சிகளும் தலா 85 தொகுதிகளில் போட்டியிடுவதை சிவசேனை (உத்தவ் தாக்கரே தரப்பு) தலைவர் சஞ்சய் ரௌத்தும் உறுதி செய்துள்ளார்.
இவர் கூறுகையில், "எக்ஸ் தளத்தில் நேற்று ஒரு பட்டியல் வெளியானது. இதில் நிறைய திருத்தங்கள் உள்ளதால், அதைச் சரிசெய்ய வேண்டியுள்ளது. இது இன்று செய்து முடிக்கப்படும். மூன்று கட்சிகளும் தலா 85 தொகுதிகளில் போட்டியிடுவதாக ஒருமனதாக முடிவுக்கு வந்துள்ளோம். மற்ற தொகுதிகளுக்கான பணிகள் இன்று மாலைக்குள் நிறைவடையும். எங்களுடைய சிறிய கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். இதுகுறித்தும் ஆலோசனை நடத்துவோம்" என்றார் அவர்.
சிவசேனை (உத்தவ் தாக்கரே தரப்பு) 65 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. இதில் ஆதித்யா தாக்கரே, சுனில் ரௌத் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆதித்யா தாக்கரே வோர்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.
288 தொகுதிகள் கொண்ட மஹாராஷ்டிரத்துக்கு நவம்பர் 20 அன்று தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 23-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 2019 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பாஜக 105 இடங்களிலும் சிவசேனை 56 இடங்களிலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.