
பாகிஸ்தானில் எந்த இடத்தில் தாக்குதல் நடத்தினால் வலிக்குமோ அந்த இடத்தைக் குறிவைத்து தாக்கினோம் என ஏர் மார்ஷல் ஏகே பாரதி தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானுடனான மோதல் குறித்து இந்திய முப்படை அதிகாரிகள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்கள்.
டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய் கூறியதாவது:
"பயங்கரவாதத்துக்குத் திட்டம் தீட்டுபவர்கள் மற்றும் குற்றவாளிகளைத் தண்டித்து, அவர்களுடைய பயங்கரவாதத்துக்கான உள்கட்டமைப்புகளை அழிக்க தெளிவான ராணுவ நோக்கத்துடன் கருத்தாக்கப்பட்டது தான் ஆபரேஷன் சிந்தூர். இந்தத் தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள். இவர்களில் ஐசி814 கடத்தல் மற்றும் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்களான யூசுஃப் அசார், அப்துல் மாலிக் ரௌஃப் மற்றும் முடாசிர் அஹமது ஆகிய முக்கியப் புள்ளிகளும் அடக்கம்.
இதைத் தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து பாகிஸ்தான் விதிமீறலில் ஈடுபட்டது. எதிரிகளின் தாக்குதலில் துரதிர்ஷ்டவசமாக நிறைய அப்பாவி மக்கள், கிராமங்கள், குருத்வாரா உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை தாக்கப்பட்டன. இதில் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்தன" என்றார்
தொடர்ந்து, முரிட்கே, பஹவல்பூர் பயங்கரவாத முகாம்களில் ஏவுகணை மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஏர் மார்ஷல் ஏக் பாரதி விவரித்தார்.
டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய் கூறுகையில், "மே 8, 9 இரவில் எல்லை கடந்து இந்திய வான் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் பறந்தன. பல்வேறு ராணுவ உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன. பெரும்பாலான முயற்சிகள் தோல்வியடைந்தன" என்றார்.
ஏர் மார்ஷல் ஏகே பாரதி கூறியதாவது:
"மே 8 மற்றும் 9 இரவில் 10.30 மணியளில் நம் நகரங்களில் நிறைய ட்ரோன்கள், ஆளில்லா வான் வாகனங்கள் பறக்கத் தொடங்கின. ஸ்ரீநகர் தொடங்கி நலியா வரை இது நடந்தது. நாம் தயார் நிலையில் இருந்ததால், நம் விமானப் பாதுகாப்புப் பிரிவும் தயார் நிலையில் இருந்ததால் தரை வழியிலும் எதிரிகள் திட்டமிட்டு குறிவைத்த இலக்குகளுக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அளவீடு செய்யப்பட்ட அளவில் பதிலடி தரும் விதமாக நாம் மீண்டும் லாகூர் மற்றும் குஜ்ரன்வாலா ராணுவ நிலைகள் மற்றும் கண்காணிப்பு ரேடார் தலங்களைக் குறிவைத்தோம். ட்ரோன் தாக்குதல்கள் காலை வரை தொடர்ந்தன. இதற்கு நாம் பதிலடி கொடுத்தோம்.
மே 8 இரவு 8 மணி முதல் பல்வேறு பாகிஸ்தானிய ஆளில்லா வான் அமைப்புகள், ட்ரோன்கள் உள்ளிட்டவை பல்வேறு இந்திய விமானப் படைத் தளங்களைக் குறிவைத்தன. ஜம்மு, உதம்பூர், பதன்கோட், அம்ரித்சர், பதிண்டா, தல்ஹௌசி, ஜெய்சால்மெர் உள்ளிட்ட விமானப் படைத் தளங்கள் அடக்கம். பாகிஸ்தானின் தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இதனால், எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
எங்கு தாக்குதல் நடத்தினால் வலிக்குமோ அந்த இடங்களைத் துரிதமாகத் தேர்வு செய்து மேற்குப் பகுதி முழுக்க அவர்களுடைய விமானப் படைத் தளங்கள், கட்டுப்பாட்டு மையங்கள், ராணுவ உள்கட்டமைப்புகள், வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்கினோம். சக்லாலா, ரஃபிக், ரஹிம் யர் கான் உள்ளிட்டவற்றை நாம் தாக்கினோம். தீவிரமானத் தாக்குதலைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதற்கானச் செய்தியாக அது அமைந்தது. இதைத் தொடர்ந்து. சர்கோதா, புலாரி மற்றும் ஜகோபாபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தினோம். இந்தப் படைத் தளங்களில் எல்லா அமைப்புகளையும் குறிவைப்பதற்கானத் திறன் நம்மிடம் உள்ளது" என்றார்.
டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய் கூறுகையில், "நேற்று பிற்பகல் 3.35 மணியளவில் பாகிஸ்தான் டிஜிஎம்ஓவிடம் பேசினேன். இதன் விளைவாக, அவர் போர் நிறுத்தத்தை முன்மொழிந்த பிறகு எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு மற்றும் இரு தரப்பினரின் வான் ஊடுருவல் மே 10 ஆம் தேதி மாலை 5:00 மணிக்கு முடிவுக்கு வந்தன. இந்தப் புரிந்துணர்வு நீடிக்க வேண்டும் என்பதற்காக மே 12 அன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எதிர்பார்த்தபடி இந்த ஏற்பாடுகளை மீறும் வகையில் சில மணி நேரங்களிலேயே எல்லைத் தாண்டி துப்பாக்கிச் சூடு மற்றும் ட்ரோன் ஊடுருவல் நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலையில் தொடர்ந்தன. இதற்கு வலுவான பதிலடி கொடுக்கப்பட்டன. இந்தப் புரிதல் மீண்டும் மீறப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்பதை பாகிஸ்தான் டிஜிஎம்ஓவிடம் தெரிவித்தோம். பாகிஸ்தான் ஏதேனும் மீறலில் ஈடுபட்டால், தக்க பதிலடியைக் கொடுக்க ராணுவத் தளபதிக்கு முப்படைகளின் தலைமை தளபதி முழு அதிகாரத்தையும் கொடுத்துள்ளார்" என்றார் டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய் கூறினார்.
ஏர் மார்ஷல் ஏகே பாரதி கூறுகையில், "எதிரிகளின் இலக்குகளில் நாங்கள் விரும்பிய சேதங்களை ஏற்படுத்திவிட்டோம். எவ்வளவு பேர் உயிரிழந்தார்கள்? எவ்வளவு பேர் காயமடைந்தார்கள்? உயிரிழப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பது நம் நோக்கமல்ல. ஒருவேளை உயிரிழப்புகள் நிகழ்ந்திருந்தால், அதைக் கணக்கிட வேண்டியது அவர்களுடைய கடமை. நம் பணி இலக்குகளைக் குறிவைப்பது, உயிரிழந்தவர்களைக் கணக்கிடுவது அல்ல. பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைகளுக்குள் ஊடுருவுவது தடுத்து நிறுத்தப்பட்டது. நிச்சயமாக, சில விமானங்களைத் தாக்கி அழித்துள்ளோம். நிச்சயமாக, அவர்கள் தரப்பில் இழப்புகள் உள்ளன. நாம் திட்டமிட்ட இலக்குகளை அடைந்துவிட்டோம். நம் விமானிகள் அனைவரும் திரும்பிவிட்டார்கள் என்பதை மட்டுமே சொல்ல முடியும்" என்றார்.