வாரிசுரிமை வரியைக் கொண்டுவரும் நோக்கம் இல்லை: மல்லிகார்ஜுன கார்கே

"நான் பேசியதற்கும், காங்கிரஸ் உள்பட எந்தவொரு கட்சியின் கொள்கைக்கும் துளியும் தொடர்பும் கிடையாது" - பித்ரோடா விளக்கம்.
வாரிசுரிமை வரியைக் கொண்டுவரும் நோக்கம் இல்லை: மல்லிகார்ஜுன கார்கே
ANI

இந்தியாவில் வாரிசுரிமை வரியைக் கொண்டு வருவதற்கான நோக்கம் தங்களுக்கு இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

வாரிசுரிமை வரி குறித்து அயலக காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடா அமெரிக்காவில் பேசியது இந்தியத் தேர்தல் களத்தில் சர்ச்சையாகியுள்ளது. பித்ரோடாவின் கருத்தைக் கொண்டு பாஜகவினர் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸை விமர்சித்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கமளித்ததாவது:

"இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் இருப்பதால், வாரிசுரிமை வரியைக் கொண்டுவருவதற்கான நோக்கம் எதுவும் காங்கிரஸுக்கு இல்லை. பாஜகவின் வார்த்தைகளை எங்களிடம் எதற்காகத் திணிக்கிறீர்கள்? இவையனைத்தையும் வெறும் வாக்குகளுக்காக மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள்" என்றார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

"நான் உள்பட உலகில் பலருக்கும் சாம் பித்ரோடா ஒரு ஆலோசகர், நண்பர், தத்துவவாதி மற்றும் வழிகாட்டி. நாட்டின் வளர்ச்சிக்காக அவர் நிறைய பங்களிப்புகளைச் செய்துள்ளார். அவர் அயலக காங்கிரஸ் தலைவர். தான் நம்பும் விஷயங்கள் குறித்த கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். ஜனநாயகத்தில் இதற்கான இடம் உண்டு. இவர் இப்படி பேசியிருப்பதால், காங்கிரஸ் கட்சியின் வெளிப்பாடாக இதைப் பார்க்கக் கூடாது" என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

தனது பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து, சாம் பித்ரோடா எக்ஸ் தளத்தில் அதுதொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார்.

"55 சதவீத சொத்து பறித்துக்கொள்ளப்படும் என்று யார் சொன்னது? இதுமாதிரியான திட்டம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று சொன்னது யார்? பாஜகவும், ஊடகத்தினரும் ஏன் பதறுகிறார்கள்.தொலைக்காட்சி விவாதத்தில் எனது சாதாரண உரையாடலின்போது, அமெரிக்காவில் வாரிசுரிமை வரி நடைமுறையில் இருப்பதாக ஓர் உதாரணத்தைக் குறிப்பிட்டேன். நான் உண்மையைக் குறிப்பிட்டு பேசக் கூடாதா? நான் பேசியதற்கும், காங்கிரஸ் உள்பட எந்தவொரு கட்சியின் கொள்கைக்கும் துளியும் தொடர்பும் கிடையாது" என்று பித்ரோடா விளக்கம் தந்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in