மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என அந்த மாநில பாஜக செப்டம்பர் 5 வரை போராட்டம் நடத்துகிறது.
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நேற்று விசாரணை நடத்தியது. விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், தேசிய அளவில் சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என அந்த மாநில பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.
மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கூறியதாவது:
"மமதா பானர்ஜியின் மேற்கு வங்க அரசு மீது நம்பிக்கை இல்லை என்பது உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு மூலம் தெரிகிறது. காவல் ஆணையர் உடனடியாக நீக்கப்பட வேண்டும். மமதா பானர்ஜி தலைமையில் பெண்கள் மீதான குற்றங்கள் அடுத்தடுத்து நிகழ்கின்றன. நிர்வாகத்தின் மீது மமதா பானர்ஜிக்கு கட்டுப்பாடு இல்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடையக் கோரிக்கை. செப்டம்பர் 5 வரை இந்தப் போராட்டம் தொடரும்.
மேற்கு வங்க பாஜக பொதுச்செயலாளர் லாக்கெட் சாட்டர்ஜி கூறியதாவது:
"ஒட்டுமொத்த நாடும் மேற்கு வங்கமும் நீதி கேட்கிறது. மமதா பானர்ஜியால் நீதி வழங்க முடியவில்லை என்றால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். தன்னுடைய அரசுக்கு எதிராகவே அவர் சாலையில் இறங்கி போராட்டம் நடத்துகிறார். நீதி வேண்டும் அல்லது மமதா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும். காவல் துறை மீது நம்பிக்கை இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. காவல் துறை சிபிஐயிடம் அனைத்து ஆதாரங்களையும் கொடுக்க வேண்டும். ஆனால், இதற்கு நேர்மாறாக காவல் துறை செயல்படுகிறது. கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைதாகக் கூடாது என்பதற்காக மமதா பானர்ஜி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்" என்றார்.