கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி மக்களவையில் பேசியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இன்று (ஆகஸ்ட் 7) மக்களவையில் உரையாற்றிய ராகுல் காந்தி, வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்குத் தேவையான விரிவான நிதியுதவியை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.
`கடந்த சில நாட்களுக்கு முன்பு என் சகோதரியுடன் நான் வயநாட்டுக்குச் சென்று, அங்கு நடந்துள்ள பேரழிவையும், அதனால் ஏற்பட்ட துன்பத்தையும் நேரடியாகப் பார்த்தேன். 200-க்கும் அதிகமான மக்கள் மரணமடைந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர், ஆனால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது’ என்று மக்களவையில் பேசினார் ராகுல் காந்தி.
`பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் உதவியை அதிகரிக்க, அவர்களுக்கு விரிவான நிதியுதவியை வழங்குமாறு மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன். வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்’ என்றார் ராகுல் காந்தி.
தன் உரையில் மத்திய அரசு, கேரள மாநில அரசு, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை, ராணுவம், கடலோரக் காவல்படை, தீயணைப்புத்துறை, அண்டை மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகியோரின் பணிகளைப் பாராட்டினார் ராகுல் காந்தி.
கடந்த ஜூலை 30-ல் கேரள மாநிலம் வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் கடுமையான நிலச்சரி ஏற்பட்டது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று 9-வது நாளாகத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.