உடனுக்குடன்..: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 181 ஆக உயர்வு

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளதாக மலையாளச் செய்தி நிறுவனங்கள் தகவல்.
உடனுக்குடன்..: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 181 ஆக உயர்வு
படம்: ttps://x.com/INCKerala/status/1818133066617114969

கேரளத்தில் கடந்த சில நாள்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேற்றிரவு பெய்த கனமழையால் வயநாட்டில் அட்டமலை, முண்டக்கை, சூரல்மலை கிராமங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 100 முதல் 150 வரையிலான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர் மழை காரணமாக மக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்த முகாமும் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தில் முண்டக்கை கிராமத்தை இணைக்கும் முக்கியப் பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், கிராமத்தை அடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், மீட்புப் பணிகள் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமித் ஷாவின் தகவல்கள் உண்மைக்கு மாறாக உள்ளன: கேரள முதல்வர் பினராயி விஜயன்

"இது பழி சுமத்துவதற்கான நேரமல்ல. எனினும், மாநிலங்களவையிலிருந்து கிடைத்த தகவலின்படி நிலச்சரிவு குறித்து ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், கேரளம் முறையாகச் செயல்படாததும் காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் கோருகிறார். நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு இந்திய

நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. 115 முதல் 204 மி.மீ. வரை மட்டுமே மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு பதிவான மழைப்பொழிவு மிக அதிகமானது. முதல் 24 மணி நேரத்தில் இந்தப் பகுதியில் 200 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் 372 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ. மழைப்பொழிவு பதிவானது. இது முன்கூட்டியே கொடுக்கப்பட்ட எச்சரிக்கையைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம். பேரிடர் ஏற்படுவதற்கு முன்பு சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை. எனினும், இந்தச் சம்பவம் நிகழ்ந்த பிறகு ஜூலை 30 காலை 6 மணிக்குதான் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தகவல்கள் உண்மைக்கு மாறானதாக உள்ளன" என்றார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி

"நிலச்சரிவால் கடும் பாதிப்புக்குள்ளான வயநாடு பகுதியில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்படும்."

- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

அதிமுக ரூ. 1 கோடி நிதியதவி

"அஇஅதிமுக ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஏழை, எளிய மக்களுக்கு தாயுள்ளத்தோடு உதவுவதிலும், அண்டை மாநிலங்களில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் உதவி செய்வதிலும் முன்னிலை வகித்து வருவதை அனைவரும் நன்கு அறிவர். அந்த வகையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அதிமுக சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்." - எடப்பாடி பழனிசாமி

கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடி நிதியுதவி: கௌதம் அதானி

நிலச்சரிவு குறித்து ஒரு வாரத்துக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது: அமித் ஷா

"உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கல்கள். இந்த நாட்டுக்கு ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படுவது தொடர்பாகத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஜூலை 23-ல் கேரள அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு 7 நாள்களுக்கு முன்பு கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிறகு ஜூலை 24, 25-ல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜூலை 26-ல் 20 செ.மீ. அளவுக்கு மேல் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலச்சரிவு ஏற்படலாம், இதில் உயிரிழப்புகள் நிகழலாம் என்று எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படுவது குறித்து கேள்விகள் வருகின்றன. 2014-க்கு பிறகு முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதற்கான அமைப்பு முறைக்காக அரசு ரூ. 2 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. இதன் வழியில் ஜூலை 23-ல் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் என்னுடைய வழிகாட்டுதலின் பெயரில் 9 தேசியப் பேரிடர் மீட்புப் படை கேரளம் விரைந்துள்ளது.

கேரள அரசு என்ன செய்துகொண்டிருந்தது? மக்கள் அப்புறப்படுத்தப்பட்டார்களா? அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டிருந்ததால் எப்படி உயிரிழந்திருப்பார்கள்? முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதற்கான திட்டம் என்பது 2016-ல் தொடங்கப்பட்டது. 2023-ல் இதற்கான மிகவும் நவீன முறை இந்தியாவிடம் தற்போது உள்ளது. 7 நாள்களுக்கு முன்பு கணிக்கக்கூடிய முறை 4 நாடுகளில் மட்டுமே உள்ளது. இதில் இந்தியாவும் ஒன்று. முன்கூட்டியே விடுக்கப்படும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, அனைத்து மாநில அரசுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்."

- மாநிலங்களவையில் அமித் ஷா பேச்சு

உயிரிழந்தோர் எண்ணிக்கை 181 ஆக உயர்வு

மண்ணில் புதையுண்ட 225 பேர் காணவில்லை என கேரள அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

நிவாரண உதவிகளை வழங்கலாம் - கேரள முதல்வர் பினராயி விஜயன்

நிவாரண நிதி அளிப்பதற்கான வங்கிக் கணக்கு எண்: 67319948232

வங்கி: எஸ்பிஐ

ஐஎஃப்எஸ்சி: எஸ்பிஐஎன்0070028

நிவாரண உதவிக்குப் பொருள்களை வழங்குபவர்கள் 1077 தொடர்பு கொள்ளலாம். பழைய பொருள்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் கேரள முதல்வர் தகவல்.

மீட்புப் பணியில் இணைந்த கடற்படை

ராணுவம், விமானப் படையுடன் கடற்படையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

கேரளத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயார்: மு.க. ஸ்டாலின்

"கேரள முதல்வரிடம் நேற்று பேசினேன். சேதாரம் பற்றி கூறினார். இன்னும் கணக்கெடுக்க முடியவில்லை, நிறைய பாதிப்புகளைச் சந்தித்துள்ளோம் என்றார். தமிழ்நாடு சார்பாக எந்த உதவியாக இருந்தாலும் அதைச் செய்யத் தயார் என்று கூறினோம். இரு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் ஒரு மருத்துவக் குழுவை அனுப்பியுள்ளோம். மேலும், தமிழக அரசு சார்பில் முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 கோடி நிதியுதவி கொடுத்துள்ளோம்."

அவசர எண் வெளியீடு

காணாமல் போனவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க உதவி எண் வெளியிடப்பட்டுள்ளது.

வயநாடு அவசரக் கட்டுப்பாட்டு மையம்: 807 840 9770

9 தமிழர்கள் உயிரிழப்பு

முண்டக்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழப்பு. இவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு தேனியிலிருந்து பிழைப்புக்காக வயநாடு சென்றிருக்கிறார்கள். 30 தமிழர்கள் மாயமாகியுள்ளதாகத் தகவல்.

விபத்தில் சிக்கிய கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கார்

வயநாடு சென்றுகொண்டிருந்தபோது கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் வீணா ஜார்ஜுக்கு லேசான காயம் ஏற்பட, மலப்புரத்திலுள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர மீட்புப் பணியில் கடலோரக் காவல் படை

முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு

திருவனந்தபுரத்திலுள்ள பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் வயநாடு மீட்புப் பணிகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 158 ஆக உயர்வு: கேரள வருவாய் துறை

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது

216 பேரைக் காணவில்லை எனவும், நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் 130 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது

கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளதாக மீட்புக் குழுவினர் தகவல் அளித்துள்ளனர்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது

98 நபர்களைக் காணவில்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது. காணாமல் போனவர்கள் பட்டியலில் பெரும்பாலானோர் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் வேலை பார்ப்பவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இரவிலும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இரவு நேரத்திலும் சூரல் மலை, முண்டகை பகுதியில் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீரோட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் தற்காலிக பாலம் அமைத்து பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

சமீபத்திய தகவல்படி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது

நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த 123 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 98 நபர்களைக் காணவில்லை எனவும் கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

250-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்: மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய்

நிலச்சரிவில் சிக்கிய 250-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணியில் ஏறத்தாழ 300 வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய்

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜூலை 31-ல் வயநாடு செல்கிறார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜூலை 31-ல் வயநாடு செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தில்லியில் இருந்து விமானம் மூலம் மைசூருக்குச் செல்லும் ராகுல் காந்தி பிறகு அங்கிருந்து காரில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மேப்பாடி கிராமத்துக்குச் சென்று அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களைச் சந்திக்கிறார்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நீலகிரியிலிருந்து வயநாடு விரையும் மீட்புக் குழுவினர்

முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின்பேரில், தமிழ்நாட்டிலிருந்து 20 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புக் குழு வயநாடு மாவட்டத்துக்குச் செல்கிறது.

இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் தீவிரம்

இணைந்து செயல்படுவோம் என தலைவர்கள் உறுதி: கேரள முதல்வர் பினராயி விஜயன்

"தீயணைப்புத் துறையில் 321 பேர் குவிக்கப்பட்டுள்ளார்கள். ராணுவத்தினரின் சேவையும் பயன்படுத்தப்படுகிறகது. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 60 பேர் வயநாட்டை வந்தடைந்திருக்கிறார்கள். பெங்களூருவிலிருந்து 80 பேர் கொண்ட குழு வந்துகொண்டிருக்கிறது. பிரதமர், ராகுல் காந்தி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் உதவிகளை வழங்கியுள்ளார்கள். இந்தச் சிக்கலான சூழலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என உறுதியளித்துள்ளார்கள்."

118 முகாம்களில் 5,531 பேர் தங்கவைப்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன்

"முடிந்தளவுக்கு அனைவருக்கும் சிறப்பான சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளார்கள். வயநாட்டில் மொத்தம் 45 மீட்பு முகாம்களைத் திறந்துள்ளோம். கேரளம் முழுக்க 118 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5,531 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மீட்புத் துறை மற்றும் காவல் துறை ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது. ராணுவம் மற்றும் கடற்படையின் பல்வேறு பிரிவுகள் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றன."

93 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன: கேரள முதல்வர் பினராயி விஜயன்

"வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு என்பது மனதை நொறுக்கக் கூடிய பேரழிவு. மிகக் கடுமையான மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்த பகுதியும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதுவரை 93 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மாறலாம். மொத்தம் 128 பேர் காயத்துக்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்."

உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆக உயர்வு

இதுவரை மொத்தம் 116 பேர் காயமடைந்துள்ளதாக கேரள வருவாய் துறை அமைச்சர் அலுவலகம் தகவல்.

சிறப்பு அதிகாரி நியமனம்

நிலச்சரிவின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட சிறப்பு அதிகாரியாக சீரம் சாம்பசிவராவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் - கேரள அரசு

துக்கம் அனுசரிப்பு

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில், கேரளத்தில் இருநாள்கள் துக்கம் அனுசரிக்க மாநில அரசு அறிவித்துள்ளது.

வயநாடு செல்லும் ராகுல், பிரியங்கா

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், ஈ.டி. முஹமது பஷீர் மற்றும் எம்கே ராகவன் ஆகியோர் நாளை வயநாடு செல்கிறார்கள்.

உதவிக்கரம் நீட்டும் கர்நாடகம்

"சவாலான இந்த நேரத்தில் கேரளத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய கர்நாடகம் உறுதி கொண்டுள்ளது." - கர்நாடக முதல்வர் சித்தராமையா

உயிரிழப்பு எண்ணிக்கை 80 ஆக உயர்வு

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 80 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 63 ஆக உயர்வு

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 63 ஆக உயர்வு, இதுவரை மொத்தம் 116 பேர் காயமடைந்துள்ளார்கள்: கேரள வருவாய் துறை அமைச்சர் அலுவலகம்

வயநாடு நிலச்சரிவு - தவெக தலைவர் விஜய் இரங்கல்

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்புடைய கோரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகள்.

அரசு அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தேவையான மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசு ரூ. 5 கோடி நிவாரணம்

வயநாடு நிலச்சரிவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசி வாயிலாகப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் விவரங்களைக் கேட்டறிந்தார். தமிழ்நாட்டிலிருந்து மீட்புக் குழு, மருத்துவக் குழு கேரளம் விரைகிறது.

மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தல்

"கடந்த சில ஆண்டுகளாக நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளன. நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் இயற்கைப் பேரிடர்களுக்கு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்."

முதல்வர் ஆய்வு

கேரள முதல்வர் பினராயி விஜயன், பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார்.

5 அமைச்சர்கள் நியனம்!

"வயநாடு நிலச்சரிவில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 5 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வனத் துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் ஏற்கெனவே சம்பவப் பகுதியைச் சென்றடைந்துவிட்டார். பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

அமைச்சர் ராமச்சந்திரன் விரைவில் சென்றடையவிருக்கிறார். வருவாய் துறை, பொதுத் துறை மற்றும் பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான துறை அமைச்சர்கள் திருவனந்தபுரத்திலிருந்து வயநாடு வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களும், விரைவில் சம்பவப் பகுதியை அடைவார்கள்."

- கேரள முதல்வர் பினராயி விஜயன்

அனைத்து அரசுப் பொது நிகழ்ச்சிகளை ஒத்திவைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பசுமைத் தீர்ப்பாயம் விசாரணை

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தேசிய தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.

அவசர அழைப்பு எண்கள்!

மாவட்டம் மற்றும் மாநில அளவில் தகவல் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநில கட்டுப்பாட்டு மையம் தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அவசர அழைப்பு எண்கள்: 0471-2327628, 2518637, 0483-2734387

கேரள முதல்வர் அலுவலகம் தகவல்

கேரள முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வயநாட்டில் ராணுவப் பொறியியல் குழு அமைக்கப்படவுள்ளது. பாலம் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, மாற்று ஏற்பாடுகளுக்காக பெங்களூருவிலிருந்து மெட்ராஸ் பொறியியல் குழு கேரளம் வரவுள்ளது.

பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்

வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஆனி ராஜா தெரிவித்துள்ளார். மக்களைக் காப்பாற்ற கேரள அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. கேரள அரசைத் தொடர்புகொண்டு பேசியதாக பிரதமர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவித்துள்ளார். இதை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பது இந்த நேரத்தில் தேவையானது. ஒட்டுமொத்த மீட்புப் பணிகளுக்கான நடைமுறையையும், மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். மத்திய அரசும், பிரதமரும் நிலைமையைக் கருத்தில்கொண்டு, அனைத்து உதவிகளையும் செய்யும் என எதிர்பார்க்கிறோம்.

ரெட் அலர்ட்

கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்

வயநாடு நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேசினேன். மத்திய அரசிடமிருந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறேன்.

கூடுதல் ராணுவப் படைகள்

வயநாட்டில் மீட்புப் பணிகளுக்காகக் கூடுதல் படைகளைக் குவிக்குமாறு மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவப் படைத் தலைவரிடம் பேசியுள்ளார்.

101பேர் மீட்பு

இதுவரை ஏறத்தாழ 101 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கேரள வருவாய் துறை அமைச்சர் அலுவலகம் தகவல்

கல்பேட்டாவில் எஸ்கேஎம்ஜே பள்ளியில் பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், உணவு உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வயநாடு நிலச்சரிவு - ராகுல் காந்தி இரங்கல்

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக கேரள முதல்வரும், வயநாடு மாவட்ட ஆட்சியரும் உறுதியளித்திருக்கிறார்கள்.

தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவது தொடர்பாக மத்திய அமைச்சர்களிடம் பேசவுள்ளேன்.

logo
Kizhakku News
kizhakkunews.in