
மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், மராத்தா சமூகத்திற்கு எதிராகச் செயல்படுவதாக மராத்தா இடஒதுக்கீடு போராளி மனோஜ் ஜராங்கே பாட்டீல் குற்றம் சாட்டியுள்ளார்.
ஃபட்னவிஸ் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற மனோஜ் ஜராங்கே தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மீதும், துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் மீதும் மராத்தா போராட்டக் குழுத் தலைவர் மனோஜ் ஜராங்கே கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
ஃபட்னவிஸ் தன்னைக் கொல்ல முயற்சிப்பதாகவும், ஊசி மூலம் தனக்கு விஷம் செலுத்த முயற்சி நடந்ததாகவும் ஜராங்கே குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மராத்தா இடஒதுக்கீட்டிற்காகத் தொடரும் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னையை நிலைநாட்ட மாநிலத்தின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
ஜல்னாவின் அம்பாத் தாலுகாவில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்திற்கு இடஒதுக்கீடு ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள். துலே-மும்பை நெடுஞ்சாலை மற்றும் அம்பாத் உள்ளிட்ட இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சிஆர்பிசி பிரிவு 144 (2) இன் கீழ் அம்பாத் தாலுகாவில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜராங்கே அந்தர்வாலி சரதியிலிருந்து புறப்பட்டு அருகிலுள்ள பாம்பேரி கிராமத்தை அடைந்தார். பின்னர் மீண்டும் அந்தர்வாலி சாரதிக்கு திரும்பி போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
மும்பை வரை பேரணியாகச் சென்று துணை முதல்வரின் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப் போவதாகவும் ஜராங்கே அறிவித்திருந்தார். அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அது பெரிய குழப்பத்தை தந்தது. எனது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு யார் வேண்டுமானாலும் வருகை தரலாம். வரவேற்க தயாராகவே இருக்கிறேன் என்று துணை முதல்வர் ஃபட்னவிஸ் பேசியுள்ளார்.
ஜராங்கேவின் அதிரடி நடவடிக்கைகளைக் கண்டித்துள்ள முதல்வர் ஷிண்டே, மாநில அரசின் பொறுமையை சோதிக்கக் கூடாது. ஜராங்கேவின் பேச்சு சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே பயன்படுத்தும் சொற்களைப் போல இருக்கிறது. அவரது ஆக்ரோஷமான பேச்சு, அவதூறு குறித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.