
வக்ஃபு திருத்தச் சட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவானது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 5 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதற்கு ஒப்புதல் அளித்தார். இதன்மூலம், வக்ஃபு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது.
இந்தச் சட்டம் இஸ்லாமிய சமூக மக்களுக்கு எதிரானதாகவும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் இருப்பதாகக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ் எம்.பி.க்கள் முஹமத் ஜாவேத், இம்ரான் பிரதாப்கார்ஹி, திமுக எம்.பி. ஆ. ராசா, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனதுல்லா கான், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோர் மற்றும் அனைத்து இந்திய இஸ்லாமியர் தனி நபர் சட்ட வாரியம் போன்ற அமைப்புகள் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கு உச்ச நீதமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவன், சியு சிங் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். விஜய் சார்பாக அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.
வழக்கு விசாரணையின்போது, மத்திய மற்றும் மாநில வக்ஃபு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படும் அம்சத்தைக் குறிப்பிட்டு, ஹிந்து மத அறக்கட்டளைகளில் முஸ்லிம்களை மத்திய அரசு அனுமதிக்குமா என உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
இதுதொடர்பாக, இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கருதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுவது பற்றி பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்கள்.
"வக்ஃபு சொத்து என அறிவிக்கப்பட்ட சொத்துகளை வக்ஃபு சொத்து அல்ல என்று குறிப்பிட முடியாது. மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கையைத் தொடரலாம். ஆனால், சட்டத்திலுள்ள அம்சங்கள் நடைமுறைக்கு வராது. வக்ஃபு வாரியங்களில் மற்ற உறுப்பினர்கள் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும்" என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுவது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தார்கள்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.