
மக்களவையில் நேற்று (ஏப்ரல் 2) தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே நள்ளிரவில் நிறைவேறியது.
நாடு முழுவதிலும் வக்ஃபு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்துவதற்காக, 1995 வக்ஃபு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையிலான சட்ட திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்டில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. கூட்டுக்குழுவின் அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.
கூட்டுக்குழு அறிக்கையின் அடிப்படையில், புதிய வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று நண்பகல் 12 மணி அளவில் மக்களவையில் தாக்கல் செய்தார். அதற்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மசோதா மீது பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்த மசோதா `உமீது மசோதா’ (Unified Waqf Management Empowerment, Efficiency and Development (UMEED) Bill) எனப் பெயர் மாற்றப்படும் என்றும், மத விவகாரங்களில் தலையிடாமல், சொத்துகளை நிர்வகிக்கும் விவகாரத்தில் தேவையான சீர்திருத்தங்களை கொண்டுவந்து வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவே இந்த மசோதா வகை செய்கிறது என்றும் பேசினார்.
மசோதாவை எதிர்த்து காங்கிரஸைச் சேர்ந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகாய், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி. ஆ. ராசா, ஷிரோமணி அகாலி தள எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்டோர் பேசினார்கள்.
இடையிடையே அமைச்சர் கிரண் ரிஜிஜுவும், கூட்டுக்குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பாலும் மசோதா தொடர்பாக விளக்கமளித்தார்கள். மசோதா மீதான விரிவான விளக்கத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வழங்கினார். நள்ளிரவு வரை எம்.பி.க்களுக்கிடையே காரசார விவாதம் நீடித்தது.
அதன்பிறகு, நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்.பி.க்களும், எதிராக 232 எம்.பி.க்களும் வாக்களித்தார்கள்.