மக்களவையில் வக்ஃபு சட்ட திருத்த மசோதா: பின்னணி என்ன?

மத சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடக்கூடாது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றக் குழுவின் ஆலோசனைக்கு அனுப்ப வேண்டும்
மக்களவையில் வக்ஃபு சட்ட திருத்த மசோதா: பின்னணி என்ன?
ANI
1 min read

வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை இன்று (ஆகஸ்ட் 8) மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜூ. இது தொடர்பாக மக்களவையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாவைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

பல வருடங்களுக்கு முன்பு இஸ்லாமிய மன்னர்களும், செல்வந்தர்களும் இறை பணிக்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை தானமாக அளித்தனர். இவை வக்ஃபு சொத்துகள் என்று அழைக்கப்பட்டன. இவற்றை முறையாகப் பராமரிக்க 1954-ல் வக்ஃபு சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது.

இதன் கீழ் வக்ஃபு வாரியங்களை நிறுவின அந்தந்த மாநில அரசுகள். இந்த வக்ஃபு வாரியங்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள வக்ஃபு சொத்துகளை நிர்வகித்து வந்தன. இதைத் தொடர்ந்து மாநில வக்ஃபு வாரியங்களை கண்காணிக்க மத்திய வக்ஃபு கவுன்சில் நிறுவப்பட்டது. பிறகு 1995-ல் புதிய வக்ஃபு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்படுத்தப்பட்டது. மத்திய வக்ஃபு கவுன்சில், மாநில வக்ஃபு வாரியங்களில் பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவும், வக்ஃபு சொத்துக்கள் குறித்து மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்யவும், வக்ஃபு சொத்துக்களை சர்வே மேற்கொள்ளும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கவும், இந்த சட்டத்திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வக்ஃபு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, `வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் மனித உரிமைக்கு எதிரானது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு மட்டுமல்லாமல், கூட்டாட்சி முறைக்கும் எதிரானது. இந்து கோவில்கள் நிர்வாகக் குழுவில் கிறிஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும் நியமிக்க முடியுமா? மதச்சார்பற்ற நாட்டில் இஸ்லாமியருக்கு எதிராக சட்ட திருத்தம் கொண்டு வருவது தவறு’ என்று பேசினார்.

`மத சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடக்கூடாது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுவது ஆபத்தானது. இந்த மசோதாவை விசிக கடுமையாக எதிர்க்கிறது’ என்று மசோதா மீதான விவாதத்தில் பேசினார் விசிக தலைவர் திருமாவளவன்.

மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, சமாஜ்வாதி எம்.பி. மொஹிபுல்லா, அசாதுதீன் ஒவைசி எம்.பி. ஆகியோர் பேசினார்கள். விவாதத்தின் இடையே எம்.பி.க்களின் கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்தார் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜூ.

இதன் பிறகு வக்ஃபு சட்டதிருத்த மசோதா மீதான மத்திய அரசின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து வக்ஃபு சட்டதிருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஒப்புக்கொண்டார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in