விவிபேட் வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

100 சதவீத ஒப்புகைச் சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருந்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் ANI
1 min read

விவிபேட் வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நாளை முதல் ஜூன் 1 வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நீண்ட நாள்களாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள விவிபேடின் ஒப்புகைச் சீட்டை 100 சதவீதம் எண்ண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. வாக்காளர் ஒருவர் வாக்களிக்கும் போது, தான் பதிவு செய்த சின்னத்தில் வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்பதை காட்டும் கருவியாக விவிபேட் இயந்திரம் அமைந்துள்ளது.

ஒருவேளை வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறுதலாக வேறு சின்னத்துக்கு தங்களுடைய ஓட்டு விழுந்திருந்தால் வாக்காளர்கள் அதை எளிதாக கண்டுபிடித்து புகார் அளிக்க முடியும். தற்போதைய நடைமுறைப்படி வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு தொகுதியிலும் தலா 5 விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 100 சதவீத ஒப்புகைச் சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என ஜனநாயக சீர்திருத்த அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. “அனைத்து விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணும் பட்சத்தில் மனித தவறுகள், பாரபட்சம் நடக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு எண்ணுவது சாத்தியமற்றது” என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் விவிபேட் வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in