வக்ஃபு சொத்துகளால் பலன் அடையும் நில மாஃபியாக்கள்: பிரதமர் மோடி

"வக்ஃபு என்ற பெயரில் லட்சக்கணக்கான ஹெக்டர் நிலங்கள் உள்ளன."
வக்ஃபு சொத்துகளால் பலன் அடையும் நில மாஃபியாக்கள்: பிரதமர் மோடி
1 min read

வக்ஃபு சொத்துகளால் நில மாஃபியாக்கள் பலன் அடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவானது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 5 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதற்கு ஒப்புதல் அளித்தார். இதன்மூலம், வக்ஃபு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் ஆ. ராசா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். இந்த வழக்கு வரும் 16 அன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வக்ஃபு திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஹரியாணாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:

"அரசியலமைப்பை அழிப்பவராக காங்கிரஸ் மாறியுள்ளது. சமத்துவத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது அம்பேத்கரின் கனவு. ஆனால், வாக்கு வங்கி அரசியல் எனும் வைரஸை காங்கிரஸ் பரப்பி வருகிறது. அனைத்து ஏழை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மரியாதையுடன் கனவுகளோடு, கனவுகளை அடைந்து, தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என அம்பேத்கர் விரும்பினார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் யாருக்கும் வங்கிகளின் கதவுகள் திறந்ததில்லை. கடன், நலத்திட்டங்கள் எல்லாம் அவர்களுக்குக் கனவாகவே இருந்தது. ஜன் தங் கணக்குகளால் பெருமளவு பயன் பெறுபவர்கள் பட்டியலின, பழங்குடியின சகோதர, சகோதரிகள்.

வக்ஃபு என்ற பெயரில் லட்சக்கணக்கான ஹெக்டர் நிலங்கள் உள்ளன. வக்ஃபு சொத்துகள் மூலம் கிடைப்பதை, தேவையானவர்களுக்குக் கொடுத்தால் அது அவர்களுக்குப் பலனாக அமையும். ஆனால், இந்தச் சொத்துகள் மூலம் நில மாஃபியாக்கள் பலன் அடைகிறார்கள். திருத்தப்பட்ட வக்ஃபு சட்டத்தின் மூலம் ஏழைகள் சுரண்டப்பட மாட்டார்கள். புதிய வக்ஃபு சட்டத்தின் மூலம் ஆதிவாசிக்குச் சொந்தமான நிலம், சொத்துகளை வக்ஃபு வாரியங்களால் தொடக்கூட முடியாது. இதன்மூலம் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தங்களுடைய உரிமையைப் பெறுவார்கள். இதுதான் உண்மையான சமூக நீதி" என்றார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in