
மஹாராஷ்டிரத்தில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதற்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதிலளித்துள்ளார்.
மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ராகுல் காந்தி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையின் படி, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் இடைவெளியில் வெறும் 6 மாத காலத்தில் இந்தத் தொகுதியில் மட்டும் 29,219 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
ராகுல் காந்தியின் எக்ஸ் தளப் பதிவு:
"மஹாராஷ்டிரத்தில் முதல்வரின் சொந்தத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் வெறும் 5 மாதங்களில் 8% அதிகரித்துள்ளது. சில வாக்குச் சாவடிகளில் 20% முதல் 30% வரை உயர்வு காணப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் வாக்களிக்க வருவதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள். தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறதா அல்லது உடந்தையாக இருக்கிறதா?
இவை தனித்த குறைபாடுகள் அல்ல. வாக்கு திருட்டு. அதனால் தான் டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் மற்றும் சிசிடிவி காட்சிகளை உடனடியாக வெளியிடுமாறு கோரிக்கை வைக்கிறோம்" என்றார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்துக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதிலளித்துள்ளார். "மஹாராஷ்டிரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இடையே 25 தொகுதிகளில் 8 சதவீதம் வரை வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் பல இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி கண்டுள்ளார்கள். மேற்கு நாக்பூரில் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் எண்ணிக்கை 7 சதவீதம் (27,065 வாக்காளர்கள்) அதிகரித்துள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் விகாஸ் தாக்ரே வெற்றி பெற்றார். வடக்கு நாக்பூரில் 7 சதவீதம் (29,348 வாக்காளர்கள்) அதிகரித்துள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சியின் நிதின் ரௌத் வெற்றி பெற்றார். வாட்கான் ஷெரியில் (புனே) வாக்காளர்கள் எண்ணிக்கை 10 சதவீதம் (50,911 வாக்காளர்கள்) அதிகரித்துள்ளது. இங்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார் தரப்பு) பபு பதாரே வெற்றி பெற்றார். உங்களுடைய வேட்பாளர் அஸ்லாம் ஷைக் வெற்றி பெற்ற மலட் மேற்கு தொகுதியில் 11 சதவீதம் (38,625 வாக்காளர்கள்) அதிகரித்துள்ளது" என்று தேவேந்திர ஃபட்னவீஸ் பதிவிட்டுள்ளார்.