
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்த நிலையில், அங்கு பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரத்தில் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற குரல்கள் வலதுசாரி அமைப்புகளால் எழுப்பப்பட்டு வருகின்றன. ஔரங்கசீப்பின் கல்லறை பாதுகாக்கப்படும், ஆனால் அவரைப் பற்றிய புகழ்ச்சிக்கு இடம் கிடையாது என மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் சட்டப்பேரவையில் நேற்று விளக்கமளித்தார்.
இதைத் தொடர்ந்து, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்த 200 பேர் நாக்பூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஔரங்கசீப்பின் கல்லறை அகற்றப்பட வேண்டும் என்பது அவர்களுடையக் கோரிக்கை. இந்தப் போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் ஔரங்கசீப்பின் கொடும்பாவியை எரித்ததாகத் தெரிகிறது. ஆனால், இஸ்லாமியர்களின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவின. இதைத் தொடர்ந்து, வன்முறை வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் வன்முறை உச்சம் பெற்றுள்ளது. வன்முறையானது அருகிலுள்ள ஒவ்வொரு இடத்துக்கும் பரவியது.
காவல் துறையினர் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தடியடியை நடத்தியும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார்கள்.
முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் நாக்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதின் கட்கரி ஆகியோர் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்கள்.
நாக்பூர் காவல் ஆணையர் ரவீந்தர் சிங்கால் கூறுகையில், "திங்கள்கிழமை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் ஊரடங்கு அமலில் இருக்கும்" என்றார். மேலும் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வன்முறை தொடர்பாக காவல் துறையினர் 50 பேரைக் கைது செய்துள்ளார்கள். சிசிடிவி மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.