ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜுலானா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகாட் வெற்றி பெற்றுள்ளார்.
ஹரியாணா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன. ஹரியாணாவில் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகாட் போட்டியிட்டார். தொடக்கத்தில் முன்னிலை வகித்து வந்த வினேஷ் போகாட், 5-ம் சுற்றில் பின்னடைவைச் சந்தித்ததாகச் செய்திகள் வந்தன.
இதன்பிறகு, வினேஷ் போகாட் மீண்டும் முன்னிலை பெறத் தொடங்கினார். இறுதியில் எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரைவிட 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வினேஷ் போகாட் வெற்றி பெற்றுள்ளார்.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் 67 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்த பிறகு, அந்தக் கட்சியில் இணைந்தார் வினேஷ் போகாட். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜாத் சமூகத்தைச் சேர்ந்த 28 பேரில் வினேஷ் போகாட்டும் ஒருவர்.
தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, ஹரியாணாவில் பாஜக 48 இடங்களிலும் காங்கிரஸ் 34 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ் தலா 1 இடத்திலும் சுயேச்சைகள் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
பாஜக 2 இடங்களிலும் காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.