இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் இந்தியா திரும்பினார். தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வினேஷ் போகாட்டுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார் இந்திய விராங்கனை வினேஷ் போகாட். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் நெ.1 வீராங்கனையான சுசாகியை வீழ்த்தி காலிறுதிக்கு அவர் முன்னேறினார். பிறகு காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை ஒக்சானாவையும், அரையிறுதியில் கியூப வீராங்கனை யுஸ்லேனிஸையும் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் வினேஷ்.
ஆனால் இறுதிச் சுற்றுக்கு முன்பு வினேஷ் போகாட்டின் எடை சரி பார்க்கப்பட்டபோது, அவர் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் வினேஷ் போகாட்டுக்கு எந்தப் பதக்கமும் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத் தீர்ப்பாயத்தில் வினேஷ் போகாட் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவில் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஆனால் வினேஷ் போகாட் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை கடந்த ஆகஸ்ட் 14-ல் விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 17) காலை தில்லி திரும்பினார் வினேஷ் போகாட்.
வினேஷ் போகாட்டுக்கு தில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, காங்கிரஸ் எம்.பி. தீபீந்தர் சிங் ஹூடா ஆகியோர் உடனிருந்தனர். தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் நெகிழ்ந்து விமான நிலையத்தில் கண்ணீர் சிந்தினார் வினேஷ் போகாட்.