மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் காங்கிரஸில் இணையவுள்ளதாகச் செய்திகள் வரும் நிலையில், இந்திய ரயில்வே பணியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
ஹரியானாவில் அக்டோபர் 5-ல் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மல்யுத்த வீரர் வினேஷ் போகாட் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதை வலுப்படுத்தும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரை பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகாட் கடந்த 4 அன்று சந்தித்தார்கள்.
இதைத் தொடர்ந்து, வினேஷ் போகாட் இன்று காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் தான் பணியாற்றி வந்த ரயில்வே பணியை வினேஷ் போகாட் ராஜினாமா செய்துள்ளார்.
"இந்திய ரயில்வேயில் பணியாற்றியது வாழ்க்கையில் பெருமைக்குரிய மறக்கமுடியாத ஒன்று. ரயில்வே சேவையிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். என்னுடைய ராஜினாமா கடிதத்தை சம்பந்தப்பட்ட ரயில் அதிகாரிகளிடம் அளித்துள்ளேன். நாட்டுக்கு சேவையாற்ற ரயில்வே அளித்த வாய்ப்புக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வினேஷ் போகாட் மற்றும் பஜ்ரங் புனியா காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்தார்கள். பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உடனிருந்தார்.