ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகாட் போட்டியிடுவது குறித்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16 அன்று வெளியிடப்பட்டது. ஜம்மு - காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் அக்டோபர் 1-ல் ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. பிறகு, அக்டோபர் 5-க்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சுகள் எழுந்துள்ளன. மக்களவைத் தேர்தலின்போது ஹரியானாவில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி அமைத்தன. இதனால், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்த எதிர்பார்ப்புகள் இருந்தன.
காங்கிரஸ் தேர்தல் குழுக் கூட்டத்தில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது குறித்து கட்சித் தலைவர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார் ராகுல் காந்தி. இதை வரவேற்பதாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆம் ஆத்மி 10 இடங்கள் வரை கேட்பதாகவும் காங்கிரஸ் 7 இடங்கள் வரை ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகாட், பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இருவரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தார்கள். எனவே, காங்கிரஸ் சார்பில் இருவரும் போட்டியிடுவது குறித்து வெளியான தகவல்கள் வலுப்பெற்றன.
இந்த நிலையில், ஹரியானாவுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தீபக் பபாரியா செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.
"திங்கள்கிழமை 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இன்று 41 இடங்களில் 32 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. குறிப்பிட்ட தொகுதிகளைக் குறித்து பிரத்யேகமாக எந்தவொரு ஆலோசனையும் நடைபெறவில்லை. இந்தப் பட்டியலில் வினேஷ் போகாட், பஜ்ரங் புனியா பெயர்கள் இடம்பெறவில்லை. இதுபற்றி நாளை மறுநாள் தெளிவான தகவல் கிடைக்கும் என நினைக்கிறேன்" என்றார்.
ஆம் ஆத்மியுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து பேசிய இவர், "ஆம் ஆத்மியுடனான பேச்சுவார்த்தை முதற்கட்டத்தில் உள்ளது. இதில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டால் அடுத்த 2-3 நாள்களில் தெரிவிக்கப்படும்" என்றார் தீபக் பபாரியா.