ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகாட் ஆகியோர் காங்கிரஸில் இணைந்துள்ளார்கள்.
ஹரியானாவில் அக்டோபர் 5-ல் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மல்யுத்த வீரர் வினேஷ் போகாட் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதை வலுப்படுத்தும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரை பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகாட் கடந்த 4 அன்று சந்தித்தார்கள்.
இதைத் தொடர்ந்து, வினேஷ் போகாட் இன்று காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. தாங்கள் பணியாற்றி வந்த ரயில்வே பணிகளை இருவரும் ராஜினாமா செய்தார்கள். தில்லியிலுள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரை நேரில் சந்தித்தார்கள்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மூத்த தலைவர் பவன் கெரா, ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பான் மற்றும் ஹரியானாவுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தீபக் பபாரியா, பஜ்ரங் புனியா, வினேஷ் போகாட் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். இருவரும் காங்கிரஸில் இணைவது குறித்த அறிவிப்பை கே.சி. வேணுகோபால் வெளியிட்டார்.
வினேஷ் போகாட், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.