
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பைத் தொடர்ந்து, 3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று (ஜூலை 30) இந்தியாவுக்கு வருகை தருகிறார் வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் ஷிங். இன்று தொடங்கி ஆகஸ்ட் 1 வரை இந்தியாவில் இருக்கும் வியட்நாம் பிரதமருடன், அந்நாட்டு முக்கிய அமைச்சர்களும், தொழிலதிபர்களும் வருகை தருகின்றனர்.
தென் கிழக்காசிய நாடான வியட்நாம் இந்திய வெளியுறவுத்துறையின் கிழக்குக் கொள்கையில் முக்கியப்பங்கு வகிக்கிறது. 1950-களில் இருந்து இந்தியா மற்றும் வியட்நாம் அரசுகளுக்கு இடையே ராஜ்ஜிய உறவுகள் உள்ளது. இது 2016-ல் சிறப்பு நிலையாக அடுத்த கட்டத்துக்கு தரம் உயர்த்தப்பட்டது.
ஆசியான், கிழக்காசிய மாநாடு போன்ற பிரந்திய அளவிலான அமைப்புகளில் இந்தியாவும், வியட்நாமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த மே 2023-ல் ஜப்பானில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டின்போது ஃபாம் மின் ஷிங்கைச் சந்தித்து தனிப்பட்ட முறையில் உரையாடினார் பிரதமர் மோடி. இதைத் தொடர்ந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கிர்பான் போர்க்கப்பலை வியட்நாமுக்கு பரிசளித்தது இந்திய அரசு.
இந்த வருகையின்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார் ஃபாம் மின் ஷிங். அதைத் தொடர்ந்து அவருக்கு மதிய விருந்தளிக்கிறார் பிரதமர் மோடி. இந்தப் பயணத்தில் தில்லி ராஜ்காட்டுக்குச் சென்று மகாத்மா காந்தியின் சமாதியில் மரியாதை செலுத்துகிறார் ஃபாம் மின் ஷிங்.
தென் கிழக்காசிய நாடுகளில் முக்கிய இடம் வசிக்கும் வியட்நாம் தென் கிழக்குச் சீனக் கடலை முன்வைத்து சீனாவுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறது.