
தில்லி-நொய்டா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளதை அடுத்து, அவர்களுடன் ஏன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானிடம் கேள்வி எழுப்பினார் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர்.
மும்பையில் நேற்று (டிச.4) நடைபெற்ற ஒரு விழாவில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானுடன் பங்கேற்ற துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர் பேசியவை பின்வருமாறு,
`உங்களுக்கு முன்பு பதவியில் இருந்த வேளாண் அமைச்சர் எழுத்துப்பூர்வமாக ஏதாவது உத்தரவாதத்தை அளித்தாரா? உத்தரவாதம் அளித்துள்ளார் என்றால் அவற்றின் நிலை என்ன? விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இடைவெளியை நாம் உருவாக்கலாமா? எதனால் இன்னும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்பது எனக்குப் புரியவில்லை.
இந்த விவகாரத்தில் இன்னும் எதுவுமே ஏற்படவில்லை என்பதுதான் என் கவலை. நீங்கள் (சிவராஜ் சிங் சௌஹான்) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சராக இருக்கிறீர்கள். சர்தார் படேலையும், இந்தியாவை ஒருங்கிணைத்த அவரது கடமையையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தியாவின் ஒருமைப்பாட்டைவிட உங்கள் முன்பு இருக்கும் சவால் குறைவானது அல்ல.
நம் விவசாயிகள் ஏன் அழுத்தத்தில் உள்ளனர்? எதனால் அவர்கள் துன்பப்படுகின்றனர்? இது மிகவும் தீவிரமான விஷயம். இதை லேசாக எடுத்துக்கொண்டால் நமக்கு நடைமுறை தெரியவில்லை என்பதும், நம்முடைய கொள்கை உருவாக்கம் சரியான திசையில் செல்லவில்லை என்பதும் அர்த்தம். விவசாயிகளின் பொறுமையை சோதித்தால் அதற்கான மிகப்பெரிய விலையை தேசம் கொடுக்கவேண்டும்’ என்றார்.
தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான உ.பி. விவசாயிகள் தில்லி-நொய்டா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய வேளாண் அமைச்சர் முன்னிலை துணை குடியரசுத் தலைவர் இவ்வாறு பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.