
மே 4, 1957-ல் திருப்பூரில் பிறந்தார் சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் எனும் சி.பி. ராதாகிருஷ்ணன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப்போல வர வேண்டும் என எண்ணி இவருக்கு ராதாகிருஷ்ணன் எனப் பெயர் வைக்கப்பட்டது. பின்னாளில் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன் பிறந்தபோது, குடியரசு துணைத் தலைவராக இருந்தார். இன்று அதே பதவியை அடைந்துள்ளார் சி.பி.ஆர்.
சி.பி. ராதாகிருஷ்ணன், சிறு வயதிலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டவர். 17 வயதில் பாரதிய ஜன சங்கத்தில் இணைந்தார். 1974-ல் ஜன சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினரானார். 1975-ல் அவசரகாலத்தில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டபோது, ஜனசங்கத் தலைவர்களின் அறிமுகம் சி.பி. ராதாகிருஷ்ணனுக்குக் கிடைக்கிறது.
இதற்கிடையே திருப்பூரில் பிறந்தவர் என்பதாலோ என்னவோ அரசியலுக்கு அப்பாற்பட்டு, பிபிஏ படித்து சொந்தமாகத் தொழில் செய்யத் தொடங்கினார். 1985 - 1998 காலகட்டத்தில் ஜவுளித் துறையில் வங்கதேசம், ஐரோப்ப நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதிகளைச் செய்து வந்தார்.
அதேசமயம், அரசியலிலும் படிப்படியாக வளர்ச்சியைக் கண்டார். 1980-ல் பாஜக தோன்றிய பிறகு அக்கட்சியின் சேவகனாகப் பணியாற்றத் தொடங்கினார். 1996-ல் பாஜகவில் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
வாஜ்பாய், அத்வானி தலைமையிலான பாஜக சார்பில் 1998 மற்றும் 1999-ல் கோவையிலிருந்து இருமுறை நாடாளுமன்றத்துக்குத் தேர்வானார். 1998-ல் சி.பி. ராதாகிருஷ்ணன் வென்ற கதை நாடறிந்தது. அதிமுக கூட்டணி சார்பில் பாஜக போட்டியிட்டது. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க எல்.கே. அத்வானி கோவைக்கு வருகை தந்தார். அத்வானியின் வருகை தாமதமான இடைப்பட்ட நேரத்தில் தான், சி.பி. ராதாகிருஷ்ணனின் பிரசார மேடைக்கு அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 15 பேர் காயமடைந்தார்கள். இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து 11 இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இந்தத் தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் 1.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வாஜ்பாய் ஆட்சி 13 மாதங்களில் கவிழ்ந்ததால், 1999-ல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. இம்முறை திமுக கூட்டணியில் போட்டியிட்டது பாஜக. கோவையில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் சி.பி. ராதாகிருஷ்ணன்.
அதிமுக சார்பில் கோவை தொகுதி இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டது. மிக மூத்த தலைவராக அறியப்படும் நல்லகண்ணு, ராதாகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிட்டார். இருந்தபோதிலும், ராதாகிருஷ்ணனுக்கே இறுதியில் வெற்றி கிட்டியது.
1999-ல் மக்களவை உறுப்பினர் ஆனபோது, பாஜக சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவிருந்ததாகவும் பெயர் குழப்பத்தால் நாகர்கோவில் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற பொன். ராதாகிருஷ்ணனுக்கு அப்பதவி சென்றதாகவும் செய்திகள் உண்டு.
அமைச்சர் பதவி கிடைக்காதபோதிலும், நாடாளுமன்றத்தில் பல்வேறு பொறுப்புகள் சி.பி. ராதாகிருஷ்ணனைத் தேடிச் சென்றன. ஜவுளித் துறையின் நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவராக செயல்பட்டார் திருப்பூரைப் பின்னணியாகக் கொண்ட ராதாகிருஷ்ணன். பொதுத் துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்ற சிறப்புக் குழு உறுப்பினராக பங்குச் சந்தை முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தியுள்ளார். நாடாளுமன்றக் குழு சார்பாக 2004-ல் ஐ.நா. பொதுச்சபையில் சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றினார். தைவான் சென்ற முதல் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களில் சி.பி. ராதாகிருஷ்ணனும் ஒருவர்.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தபோதிலும், கொடுத்த பணிகளைச் செவ்வென செய்து வந்ததால் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்கான பொறுப்பு வழங்கப்பட்டது. 2004 முதல் 2007 வரை பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார் சி.பி. ராதாகிருஷ்ணன். மாநிலத் தலைவராக 93 நாள்களில் தமிழ்நாடு முழுக்க 19 ஆயிரம் கி.மீ.-க்கு ரத யாத்திரை மேற்கொண்டார். நதி நீர் இணைப்பு, பயங்கரவாத ஒழிப்பு, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, தீண்டாமையை அழிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டது.
2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் கோவை தொகுதியில் போட்டியிட்டார் சி.பி. ராதாகிருஷ்ணன். இருமுறையும் தோல்வியே மிஞ்சியது. 2014-ல் தமிழ்நாடு முழுக்க மோடியா, லேடியா என்ற ஜெயலலிதாவின் கர்ஜனையில் வெறும் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் சி.பி. ராதாகிருஷ்ணன். திமுகவை மூன்றாவது இடத்துக்குத் தள்ளியது, கோவையில் ராதாகிருஷ்ணன் செல்வாக்கு என்பதை உணர்த்தியது. இந்தத் தேர்தல் தோல்வி இன்றளவும் சி.பி. ராதாகிருஷ்ணனை துருத்திக்கொண்டே இருக்கிறது.
2016-ல் தென்னைநார் வாரியத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இவர் 4 ஆண்டுகள் தலைவராக இருந்த காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து ரூ. 2,532 கோடி அளவுக்கு தென்னைநார் ஏற்றுமதி நடைபெற்றது. 2020-ல் கேரள பாஜகவின் மேலிடப் பொறுப்பாளரானார் சி.பி. ராதாகிருஷ்ணன்.
தமிழிசை சௌந்தரராஜன், இல. கணேசன் வரிசையில் தமிழ்நாட்டிலிருந்து மத்திய பாஜகவால் ஆளுநராக நியமிக்கப்பட்ட மூன்றாவது பெரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன். பிப்ரவரி 2023-ல் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆளுநராக நியமிக்கப்பட்டபோதிலும், அவர் சும்மா இல்லை. பொறுப்பேற்ற முதல் 4 மாதங்களில் ஜார்க்கண்ட் முழுக்க 24 மாவட்டங்களுக்குச் சென்று மக்களிடமும் மாவட்ட அதிகாரிகளிடமும் கலந்துரையாடினார்.
இதனிடையே, ஆளுநர் பதவிகளைத் துறந்து மீண்டும் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார் தமிழிசை சௌந்தரராஜன். இதன் காரணமாக தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்புகளைக் கூடுதல் பொறுப்பாக வகித்து வந்தார். கடந்தாண்டு ஜூலை 31 அன்று மஹாராஷ்டிர ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார்.
ஆளுநராக இருந்தபோதும் அரசியல் கருத்துகளைத் தெரிவிப்பதில் தயக்கம் காட்டாமல் இருந்தார் சி.பி. ராதாகிருஷ்ணன். தமிழ்நாட்டில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கப்படுவதை விமர்சித்துப் பேசிய அவர், கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோதே ஒன்றிய அரசு என்று அழைக்கவில்லை என்றார். மேலும், ஒன்றிய அரசு என்றழைப்பது வேற்றுமையை விதைப்பதாகக் கூறிய அவர், ஒன்றிய அரசு என்று அழைத்தால் மாநில அரசைப் பஞ்சாயத்து அரசு என அழைக்கலாம் என்று சர்ச்சையைக் கிளப்பினார்.
ஆளுநரானதால் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்டபோது, தேர்தல் களம் பற்றி யோசிக்கவில்லை என்று பதிலளித்தவர், தற்போது நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பல ஆண்டு காலம் அனுபவம் பெற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன், அரசியலில் அமைதியானவர் எனப் பெயர் பெற்றுள்ளவர். கட்சிக்கு அப்பாற்பட்டு நட்பு பாராட்டக்கூடியவர். அண்மையில் கூட தமிழ்நாட்டுக்கு வந்திருந்தபோது, முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துச் சென்றார்.
இவருடைய இத்தன்மை நாடாளுமன்றத்திலும் தொடருமா அல்லது மாற்றம் பெறுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
Vice President Election | CP Radhakrishnan | Jagdeep Dhankar | Sudershan Reddy | Sudarshan Reddy| NDA Candidate | INDIA Alliance candidate |