
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மருத்துவக் காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் (74) ஆகஸ்ட் 2022-ல் பொறுப்பேற்றுக்கொண்டார். மூத்த வழக்கறிஞரான ஜெகதீப் தன்கர் 2019 முதல் 2022 வரை மேற்கு வங்கத்தின் ஆளுநராக இருந்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் மாநிலங்களவைத் தலைவராகவும் செயல்பட்டார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) காலை கூடியது. ராஜினாமா செய்வது பற்றி எந்த சமிக்ஞையும் ஜெகதீப் தன்கரிடமிருந்து வெளிப்படவில்லை. இந்நிலையில், திடீரென குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார்.
"மருத்துவ அறிவுரைக்கிணங்க உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 67(a)-ன்படி குடியரசு துணைத் தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்" என்று ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு கெஜதீப் தன்கர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
"பிரதமர் மோடியின் ஒத்துழைப்பும் ஆதரவும் விலைமதிப்பற்றவை. குடியரசு துணைத் தலைவராக இருந்தபோது, நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமிருந்தும் நான் பெற்ற பரிவு, நேசம், நம்பிக்கையை என்றும் என் நினைவில் போற்றுவேன்" என்று ஜெகதீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜெகதீப் தன்கர் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Jagdeep Dhankhar | Vice President of India |