தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட்ட ஹிந்து அமைப்புகள்: இந்திய தூதருக்கு சம்மன் | Bangladesh |

வங்கதேச கலவரத்தின்போது ஹிந்து இளைஞர் கொல்லப்பட்டதற்கு எதிராக ஹிந்து அமைப்பினர் போராட்டம்...
தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட்ட ஹிந்து அமைப்புகள்: இந்திய தூதருக்கு சம்மன்
தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட்ட ஹிந்து அமைப்புகள்: இந்திய தூதருக்கு சம்மன்ANI
2 min read

தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு வெளியே விஷ்வ ஹிந்து பரிஷித் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அது குறித்து விளக்கமளிக்க இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வங்​கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவ அமைப்பினர் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதையடுத்து, மனிதாபிமானத்திற்கு எதிராக துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்ட விவகாரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்காக அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேச வெளியுறவுத் துறை இந்தியாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் இண்டர்போல் துறையின் உதவியையும் நாடியிருக்கிறது.

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்

வங்கதேசத்தில் மாணவ போராட்டத்தை முன்னெடுத்த அவ்வமைப்பின் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததை அடுத்து அங்கு கலவரம் வெடித்துள்ளது. அதிலும், ஹாடியைச் சுட்டதாக கருதப்படும் இருவர் சட்டவிரோதமாக எல்லை தாண்டி இந்தியாவுக்குத் தப்பி வந்துவிட்டதாக வங்கதேச ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டில் உள்ள சட்டோகிராம் தூகரகம் உள்பட இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால், வங்கதேசத்தில் செயல்படும் இந்திய தூதரகங்கள் விசா சேவைகளை நிறுத்தின.

ஹிந்து இளைஞர் கொலை

இதற்கிடையில் கடந்த டிசம்பர் 18 அன்று இரவு, மைமன்சிங் மாவட்டத்தின் பலுகா பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் என்பவர் கலவரக்காரர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை அவர்கள் எரித்த நிலையில், வங்கதேசத்தில் சிறுபன்மையினராக வசிக்கும் இந்துக்கள் மத்தியில் இச்செயல் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஹிந்து அமைப்புகள் போராட்டம்

இதனைத் தொடர்ந்து ஹிந்து இளைஞர் கொல்லப்பட்டதைக் கண்டித்து தில்லி, திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள வங்கதேச தூதரகங்களுக்கு வெளியே ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், மூன்று தூதரகங்களிலும் விசா சேவைகளை நிறுத்துவதாக வங்கதேசம் அறிவித்துள்ளது. குறிப்பாக தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு வெளியே பல்வேறு விஷ்வ ஹிந்து பரிஷித் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூதரகத்தைச் சுற்றி காவல்துறை அமைத்துள்ள தடுப்புகளை உடைத்து உள்ளே புக முயன்றனர். இதனால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்திய தூதருக்கு சம்மன்

அப்பகுதியைச் சுற்றிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் வங்கதேச தூதரகங்களுக்கு வெளியே நடைபெற்று வரும் போராட்டம் குறித்து விளக்கமளிக்க, வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரை நேரில் ஆஜராக அந்நாட்டு வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், தூதரக ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Summary

Members of Vishva Hindu Parishad and other Hindu organizations protest near the Bangladesh High Commission over the atrocities against Hindus and the mob lynching of Dipu Chandra Das in Bangladesh

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in