
மூத்த காங்கிரஸ் தலைவரும், மக்களவை முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீலின் மருமகள் அர்ச்சனா பாட்டீல் சந்துர்கர் சனிக்கிழமை, மஹாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார்.
இந்த நிகழ்வின்போது பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவன்குலேவும் உடன் இருந்தார். அர்ச்சனா பாட்டீல், உத்கிரில் உள்ள லைஃப்கேர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக உள்ளார். அவரது கணவர் ஷைலேஷ் பாட்டீல் சந்துர்கர், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளராக உள்ளார்.
முன்னதாக அர்ச்சனா, தெற்கு மும்பையில் உள்ள தேவேந்திர பட்னவிஸ் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார்.
சிவராஜ் பாட்டீல் 2004 முதல் 2008 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய உள்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.
இதனிடையே சுயேச்சை எம்.பி.யான நவநீத் ரானா, நாக்பூரில், பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார்.
கடந்த ஐந்து வருடங்களாக நான் பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைப்படியே செயல்பட்டு வந்தேன். எனது கொள்கைக்கும் அவரது கொள்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எனது கணவர் எம்.எல்.ஏ. ரவி ரானாவும், மஹாராஷ்டிரத்தில் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்துள்ளார்.
எனது கடுமையான உழைப்பைக் கருத்தில் கொண்டுதான் பிரதமர் மோடி அமராவதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடத் தேர்தல் டிக்கெட் கொடுத்துள்ளார். நான் அர்ப்பணிப்புடன் பாஜகவுக்காக உழைப்பேன். இந்தத் தேர்தலில் 400 என்ற இலக்கை பாஜக நிச்சயம் எட்டிவிடும் என்றார் நவநீத் ரானா. கடந்த 2019 தேர்தலில் அமராவதி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றார் நவநீத் ரானா.
மஹராாஷ்டிர மாநிலத்தில் ஏப்ரல் 19, 26, மே 7, 13 மற்றும் மே 20 என ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.