
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மேற்கு வங்க முதலமைச்சருமான புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று (ஆகஸ்ட் 8) காலை கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார்.
1977-ல் தொடங்கி, தொடர்ந்து 23 வருடங்கள் மேற்கு வங்க மாநில முதல்வராகப் பதவி வகித்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதி பாசு. அவரது அமைச்சரவையில் 23 வருடங்கள் பல்வேறு துறைகளின் அமைச்சராகச் செயல்பட்டார் புத்ததேவ் பட்டாச்சார்யா.
2000-ல் முதல்வர் பதவியை ஜோதி பாசு ராஜினாமா செய்தபோது அவருக்குப் பதில் மேற்கு வங்க முதல்வராகத் தேர்வானார் புத்ததேவ் பட்டாச்சார்யா. அதற்குப் பிறகு இரு சட்டப்பேரவைத் தேர்தல்களில் வென்று, 2011 வரை மேற்கு வங்க முதல்வர் பொறுப்பில் இருந்தார் பட்டாச்சார்யா. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வென்று 34 வருட கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதல்வராக மட்டுமல்லாமல், அக்கட்சியின் உச்சபட்ட அதிகாரம் கொண்ட பொலிட் பீரோ அமைப்பின் உறுப்பினராக 2002 முதல் 2015 வரை செயல்பட்டுள்ளார் புத்ததேவ் பட்டாச்சார்யா.
80 வயதான புத்ததேவ் பட்டாச்சார்யா முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பட்டாச்சார்யாவின் விருப்பப்படி அவரது உடல் உறுப்புகள் மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்கப்பட இருக்கிறது.