100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றான மசோதா: மக்களவையில் நிறைவேற்றம் | VB G RAM G |

சபாநாயகர் இருக்கை அருகில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு...
நாடாளுமன்ற மக்களவை (கோப்புப்படம்)
நாடாளுமன்ற மக்களவை (கோப்புப்படம்)
2 min read

மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றப்பட்ட விபி-ஜி-ராம் ஜி திட்ட மசோதா மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மாற்றாக விக்சித் பாரத் - கேரன்டி ஃபார் ரோஸ்கர் மற்றும் அஜீவிகா என்ற திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டது. இப்புதிய திட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உள்ள 100 நாள் வேலையை 125 நாள்களாக உயர்வு, தொழிலாளர்களுக்கான ஊதியத்தின் மொத்தச் செலவில் 40% மாநில அரசும் 60% மத்திய அரசும் ஏற்கும் நடைமுறை உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. இது தொடர்பான மசோதாவைக் கடந்த டிசம்பர் 17 அன்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சவுகான் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்தார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புக் குரலை பலமாக எழுப்பினர். இதற்கிடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையடுத்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இந்தத் திட்டத்தை எதிர்த்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரணி நடத்தினர். பேரணியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பெயர் மாற்றுவது மூலம் மக்களுக்குக் காங்கிரஸ் வழங்கிய உரிமையை பாஜக பறிக்க நினைக்கிறது. இது ஒரு பெரிய பிரச்னை, இது ஏழைகளுக்கு மிகவும் கடினமானது. எனவே, நாங்கள் இதற்காக இறுதிவரை போராடுவோம். நாங்கள் வீதிகளில் போராடுவோம், ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு போராட்டம் நடைபெறும்” என்றார்.

தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதங்கள் நடந்தன. அப்போது திட்டத்தை விளக்கிப் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான், “கிராமப்புறங்களின் தற்சார்பு நிலையைக் குறித்த மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையைச் செயல்படுத்தும் முறையில் இந்தப் புதிய சட்டம் மூலம் மக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இத்திட்டம் கிராமப்புறங்களின் முழுமையான வளர்ச்சியையும், வறுமையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அமையவுள்ளது” என்றார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்வந்து முற்றுகையிட்டனர். இதனால் மக்களைவை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். டிசம்பர் 19 காலை 11 மணிக்கு மக்களைவை மீண்டும் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The VB-G-Ram G scheme bill, which renames the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA), was passed in the Lok Sabha amidst strong opposition.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in