
இந்தியாவின் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரும், நாட்டின் 'புலி மனிதர்' என்று பரவலாக அறியப்பட்டவருமான 73 வயதான வால்மிக் தாப்பர், இன்று (மே 31) காலை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
ஏறத்தாழ நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டின் வனவிலங்கு பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தாப்பர், புலிகள் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தினார். சமூக அடிப்படையிலான பாதுகாப்பு முயற்சிகளில் கவனம் செலுத்தும் அரசு சாரா அமைப்பான ரன்தம்போர் அறக்கட்டளையை 1988-ல் நிறுவியதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.
வேட்டையாடுதலை தடுப்பதற்கு எதிரான கடுமையான சட்டங்களுக்காகவும், புலிகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்காகவும் அவர் குரல் கொடுத்து வந்தார். புலிகள் பாதுகாப்பிற்காக மனித தலையீடு இல்லாத பிரத்யேக மண்டலங்களை வரையறுக்க அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.
வனவிலங்குகள் பற்றிய 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை தாப்பர் எழுதியும், திருத்தியும் உள்ளார். பிரதமர் தலைமையிலான தேசிய வனவிலங்கு வாரியம் உள்பட 150-க்கும் மேற்பட்ட அரசுக் குழுக்கள் மற்றும் பணிக்குழுக்களில் அவர் பணியாற்றியுள்ளார்.
2005-ம் ஆண்டில், ராஜஸ்தானின் சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் இருந்து ஆபத்தான முறையில் புலிகள் காணாமல் போனதைத் தொடர்ந்து, அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட புலிகள் பணிக்குழுவில் தாப்பர் நியமிக்கப்பட்டார். புலிகள் நீண்ட காலத்திற்கு உயிர்வாழ வேண்டுமென்றால், மிகப்பெரிய அளவிலான நிலப்பரப்புகள் வனவிலங்குகளுக்காக மட்டுமே பாதுகாக்கப்படவேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.
தாப்பரின் தந்தை ரோமேஷ் தாப்பர் பிரபலமான பத்திரிகையாளர். இந்தியாவின் முன்னோடி வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ரோமிலா தாப்பர் மற்றும் பத்திரிகையாளர் கரண் தாப்பர் அவரது உறவினர்களாவார்கள். பாலிவுட் நடிகர் சஷி கபூரின் மகள் சஞ்சனா கபூர் அவரது மனைவியாவார்.
வால்மிக் தாப்பரின் உடல் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு லோதி மின்சார மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.