உத்தரகண்ட் மேகவெடிப்பு சம்பவம்: 150 பேர் மீட்பு, பலர் மாயம்!
தொடர்ந்து பருவமழை பெய்து வரும் நிலையிலும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாராலி கிராமத்தின் இடிபாடுகளில் இருந்து இன்று (ஆக. 6) மீட்புப் பணியாளர்கள் ஒரு உடலை மீட்டுள்ளனர்.
ஹிந்துக்களின் புனித தலமான கங்கோத்ரி, கடல் மட்டத்தில் இருந்து 10,200 அடி உயரத்தில் இமய மலைத்தொடரில் உத்தரகண்ட் அம்மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கங்கோத்ரி கோயிலுக்கு 8 கி.மீ.க்கு முன்பாக அமைந்துள்ள தாராலி கிராமத்தில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வந்தன.
கடந்த சில வாரங்களாக ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலத்தில் பருவமழை பெய்து வந்த நிலையில், கங்கோத்ரியில் பகுதியில் நேற்று (ஆக. 5) திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது.
இதனால் அங்குள்ள கீர் கங்கா நதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து, அதனால் ஏற்பட்ட மண்சரிவால் ஒட்டுமொத்த தாராலி கிராமமும் அடித்துச்செல்லப்பட்டது. இதில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாகவும், பலரைக் காணவில்லை என்றும் செய்தி வெளியானது.
இதற்கிடையே மண் சரிவு குறித்த தகவல் கிடைத்ததும் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் அங்கு மீட்புப் பணியை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தாராலி கிராமத்தில் இருந்து 150 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிகாரிகள் அளித்த தகவலின்படி, மண்சரிவால் இதுவரை காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 60-க்கும் மேற்பட்டு இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த துயரச் சம்பவத்தின்போது ஹர் துத் கண்காட்சிக்காக கிராமத்தில் பலர் கூடியிருந்ததால் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கிராமத்திற்கு அருகில் இருக்கும் ஹர்சிலில் உள்ள முகாமைச் சேர்ந்த 11 ராணுவ வீரர்களும் காணாமல் போனவர்களில் அடங்குவர் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.