
உத்தரகண்ட மாநிலத்தின் உத்தர்காசியில் உள்ள தாராலி கிராமத்தில் இன்று (ஆக. 5) நிகழ்ந்த சக்திவாய்ந்த மேக வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரும் மண்சரிவால், குறைந்தபட்சம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் ஹிந்துக்களின் புனித தலமான கங்கோத்ரி நகருக்கான அனைத்து சாலை இணைப்புகளும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டன. இந்த பேரழிவு காரணமாக, அந்த பகுதி முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மீட்புப் பணிக்கான உதவி உடனடியாக கோரப்பட்டுள்ளது.
பெரு வெள்ளத்தாலும், மண் சரிவாலும் பாதிக்கப்பட்ட பகுதிகள் கங்கை மாதாவின் குளிர்கால வசிப்பிடமான முக்பாவுக்கு அருகே உள்ளன.
இந்த சம்பவம் ஆழ்ந்த வேதனையை அளிப்பதாக கூறியுள்ள உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்தார். தன்னுடைய எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில்,
`தாராலியில் (உத்தரகாசி) நிகழ்ந்த மேக வெடிப்பால் ஏற்பட்ட பெருஞ்சேதம் குறித்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற தொடர்புடைய குழுக்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. அனைவரின் பாதுகாப்பிற்காக நான் பிரார்த்திக்கிறேன்’ என்றார்.
சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், தொடர் மழையாலும் மீட்பு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேநேரம் காணாமல்போன நபர்களைக் கண்டுபிடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
பரவலாகப் பெய்துவரும் பருவமழையால் உத்தரகண்ட் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் தலைநகர் டேராடூனில், கடந்த ஞாயிறு இரவில் பெய்த தொடர் மழையால் நேற்று (ஆக. 4) அனைத்துப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டன.
கங்கை மற்றும் காளி ஆறுகள் ஹரித்துவாரில் அபாய கட்டத்தைத் தாண்டிப் பாய்கின்றன.