
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட மேக வெடிப்பால் பாதிப்புக்குள்ளான தாராலி பகுதியை இணைக்க இந்திய ராணுவம் ஒரு பெய்லி பாலத்தை கட்டியுள்ளது.
பெருவெள்ளம் மற்றும் மண்சரிவால் துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளை இணைக்கவும், மீட்புக் குழுக்களின் போக்குவரத்திற்காகவும், சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கவும், இந்த பெய்லி பாலம் உதவும் என்று கூறப்படுகிறது.
இந்திய ராணுவமும், எல்லைப்பகுதி சாலைகள் அமைப்பும் (BRO) இணைந்து கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் ஓர் இரவு முழுவதும் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பலனாக இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் வாகனங்கள் பயணித்து பாதிக்கப்பட்டுள்ள தாராலியை அடைய அணுகு சாலைகள் சீரமைக்கப்படவேண்டும். அதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கங்னானி மற்றும் தாராலிக்கு இடையேயான லிம்சகாட்டை கடக்க இந்த பெய்லி பாலம் உதவும். கிட்டத்தட்ட 50 டன் எடையுள்ள இந்த பாலம், சவாலான இமயமலை நிலப்பரப்பில் மீட்புப் பணிகளுக்கு கணிசமாக உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாராலிக்கான அணுகு சாலைகள் சரிசெய்யப்படும் வரை, பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகள் பயன்படுத்தப்படவேண்டும் என்று மாநில உள்துறை செயலாளர் சைலேஷ் பகுலி தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
தாராலிக்கு ஒரு நாளைக்கு 2,000 லிட்டர் டீசல் வழங்கப்படுவதை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதை எளிதாக்கவும், அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தாராலி கிராமத்தில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு மேக வெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண்சரிவால் கிராமத்தில் இருந்த வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். மேலும், ஹர்சிலில் உள்ள ஒரு ராணுவ முகாமும் சேதமடைந்தது, ஒன்பது வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.
கடந்த புதன் (ஆக. 6) அன்று மீட்புப் பணிகள் தொடங்கியதில் இருந்து, சனிக்கிழமை மாலைக்குள் தாராலி மற்றும் ஹர்சிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர், விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.