
உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள தரலி நகரில், நேற்று (ஆக. 23) நள்ளிரவுக்குப் பிறகு பேரழிவை ஏற்படுத்தும் வகையிலான மேகவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதனால் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர், மண் மற்றும் குப்பைகள், துணை மண்டல மாஜிஸ்திரேட் குடியிருப்பு, தாலுகா வளாகம் மற்றும் ஏராளமான வீடுகளை மூழ்கடித்தன.
இது குறித்த மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகத்தின் முதல் அறிக்கைகளின்படி, குறைந்தது இரண்டு பேர் இறந்திருக்கலாம் அல்லது மண்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக ஒரு இளம்பெண் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளதாகவும், மற்றொருவர் காணாமல்போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உத்தரகண்டில் பெய்து வரும் பருவமழையின்போது ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் உருவான வெள்ளம், தரலி பஜார், கேதர்ப்கர், ரதிப்கர் மற்றும் செபாடோன் பகுதிகளில் பரவலான சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல வாகனங்கள் மண்சரிவுக்கு அடியில் புதைந்துள்ளதாகவும், சாலைகள் சேற்றுக் குளங்களாக மாறி நகரத்தின் சில பகுதிகளுக்கான அணுகலைத் துண்டித்ததாகவும், அரசு நிர்வாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வெள்ள நீரால் அணுகுச் சாலை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
`தரலி நகரில் அதிகாலை 1 மணியளவில் கனமழைக்கு மத்தியில் மேக வெடிப்பு ஏற்பட்டது’ என மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், `துணை மண்டல மாஜிஸ்திரேட்டின் அதிகாரபூர்வ குடியிருப்பு மற்றும் தாலுகா வளாகம் உட்பட பல குடியிருப்பு கட்டடங்களுக்குள் தண்ணீர் மற்றும் குப்பைகள் நுழைந்தன, அவை இப்போது சேற்றால் நிரம்பியுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.
நள்ளிரவு நேரத்தில் திடீரென ஆர்ப்பரித்த வெள்ள நீரில் இருந்து தப்பிக்க, குடியிருப்பாளர்கள் அலறி அடித்துக்கொண்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக, அக்காட்சிகளை நேரில் பார்த்தவர்கள் விவரித்துள்ளனர்.
இதன் எதிரொலியாக, தரலி தாலுகாவில் உள்ள 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளுக்கும், அங்கன்வாடி மையங்களுக்கும் இன்று (ஆக. 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக காவல்துறை, உள்ளாட்சி அமைப்பின் ஊழியர்கள், பேரிடர் மீட்புப் படையினர் அங்கு கூடியுள்ளனர்.