கெஜ்ரிவால் கைது விவகாரம்: நேர்மையான விசாரணையை எதிர்பார்க்கும் அமெரிக்கா!

நாங்கள் கூறுவதெல்லாம் வெளிப்படையான, நேர்மையான, சட்டப்படியான விசாரணை வேண்டும் என்பதுதான்...
கெஜ்ரிவால் கைது விவகாரம்:
நேர்மையான விசாரணையை எதிர்பார்க்கும் அமெரிக்கா!
ANI

தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நேர்மையான, சட்டப்படியான விசாரணை நடைபெறும் என்று கருதுவதாக அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது.

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை அமெரிக்கா கருத்து வெளியிட்டிருந்தது.

இதையடுத்து இந்தியா, தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி குளோரியா பெர்பினாவை நேரில் அழைத்து தனது கண்டனத்தையும் ஆட்சேபத்தையும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மாத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் சிலவற்றை வரித்துறை அதிகாரிகள் முடக்கி வைத்திருப்பதும் எங்களுக்குத் தெரியும் என்று மில்லர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் பிரசாரத்தை முடக்கும் வகையிலேயே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு விவகாரங்களிலும் சட்டப்படியும், நேர்மையான முறையிலும், வெளிப்படைத்தன்மையுடனும் விசாரணைகள் நடைபெறும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக  அவர் மேலும் கூறியுள்ளார்.

நாங்கள் ராஜீய உறவிலான விவகாரங்கள் குறித்து பேசப்போவதில்லை. நாங்கள் கூறுவதெல்லாம் வெளிப்படையான, நேர்மையான, சட்டப்படியான விசாரணை வேண்டும் என்பதுதான். இதற்கு ஆட்சேபம் தெரிவிக்க எந்த காரணமும் இல்லை என்றே நாங்கள் நினைக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மதுபான ஊழல் முறைகேடு தொடர்பான வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, அமலாக்கத்துறை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. பின்னர் அவர் விசாரணைக்காக அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டார்.

கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஜெர்மனி கருத்து தெரிவித்திருந்தது. கெஜ்ரிவால் விவகாரத்தில் விசாரணை நேர்மையாகவும் சட்டப்படியும் நடைபெறும் என்று நம்புவதாக அது கூறியிருந்தது.

இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகம், தில்லியில் உள்ள ஜெர்மன் நாட்டுத் தூதரக அதிகாரியை நேரில் அழைத்து ஆட்சேபம் தெரிவித்தது. உள்நாட்டு விவகாரங்களில் அனாவசியமாகத் தலையிட வேண்டாம் என்று எச்சரித்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in