அரசியல் சாசனத்தை மீறும் யுபிஎஸ்சி: திமுக எம்.பி. வில்சன்
ANI

அரசியல் சாசனத்தை மீறும் யுபிஎஸ்சி: திமுக எம்.பி. வில்சன்

பிரதமர் அவர்களே, நீங்கள் இந்த சட்டவிரோதமான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடரப் போகிறீர்களா?
Published on

அரசுப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி, பிரிவினருக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள இட ஒதுக்கீடு முறையை யுபிஎஸ்சி பின்பற்றாதது குறித்து தன் எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டுள்ளார் திமுக மாநிலங்களவை எம்.பி. வில்சன்.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும், துறைகளிலும் இணை செயலர் மற்றும் துணை செயலர் நிலையில் உள்ள 45 காலி பணியிடங்களுக்கான நேரடி ஒப்பந்த முறையிலான ஆட்சேர்க்கை அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்றழைப்படும் யுபிஎஸ்சி நேற்று (ஆகஸ்ட் 17) வெளியிட்டது.

யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள இந்த ஆட்சேர்க்கை அறிவிப்பில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை என்று தன் எக்ஸ் கணக்கில் குற்றம்சாட்டியுள்ளார் எம்.பி. வில்சன். இது தொடர்பாக வில்சன் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு:

`ஆட்சேர்ப்பு முறையில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி, பிரிவினருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டை யுபிஎஸ்சி எப்படி புறக்கணித்துள்ளது என்பதற்கு இன்று வெளியிடப்பட்டுள்ள பின்வரும் அறிவிப்பு ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.

இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமல், 10 இணை செயலர், 35 துணை செயலர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு ஊழியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அறிவிப்புகளில், மொத்தமுள்ள 45 இணை செயலர் மற்றும் துணை செயலர் பதவிகளில் குறைந்தது 22-23 விண்ணப்பதாரர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்.சி / எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். யுபிஎஸ்சி-யின் இந்த அறிவிப்பு அரசியல் சாசனத்தை மீறும் செயல் இல்லையா?

பிரதமர் அவர்களே, நீங்கள் இந்த சட்டவிரோதமான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடரப் போகிறீர்களா? அல்லது அரசியல் சாசனம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு முறையை செயல்படுத்தி புதிய நியமனத்துக்கு அழைப்பு விடுக்கப் போகிறீர்களா?’

logo
Kizhakku News
kizhakkunews.in