பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது!

உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டத் தேர்தல் அதிகாரிக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது!
Screen Grab

உத்தரப் பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

எடா மாவட்டத்திலுள்ள கிராமத் தலைவரின் 17 வயது மகன் ஃபரூக்காபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு 8 முறை வாக்களித்துள்ளார். வெவ்வேறு வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்குச் சாவடிக்குள் சென்ற அவர் 8 முறை வாக்களித்து, அதைக் காணொளியாகப் பதிவு செய்துள்ளார்.

இந்தக் காணொளி நேற்று முதல் இணையத்தில் அதிகளவில் பரவி வந்தது. சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்களுடைய எக்ஸ் தளப் பக்கங்களில் இந்தக் காணொளியைப் பகிர்ந்திருந்தார்கள்.

இதைத் தொடர்ந்து, இந்தச் சிறுவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காணொளி குறித்து கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ள தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அதிகாரியை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி உத்தரவிட்டுள்ளது. சம்பவம் நடைபெறும்போது வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகள் அனைவரையும் இடைநீக்கம் செய்து, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in