
உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் ரயில் நிலையத்தில் நேற்று (ஜன.11) கட்டட இடிபாடுகளில் சிக்கிய 28 தொழிலாளிகளும், 16 மணிநேர தொடர் மீட்புப் பணிகளுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர்.
உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் ரயில் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. புதிதாகக் கட்டப்பட்ட வந்த கட்டிடத்தின் மேற்கூரை ஷட்டர் (கான்கிரீட்டை தாங்கிப்பிடிக்கும் தற்காலிக கட்டமைப்பு) நேற்று (ஜன.11) மதியம் சரிந்ததால், கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதனால் அங்கு பணியில் இடுபட்டிருந்த 28 தொழிலாளிகள் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து 16 மணிநேரம் மீட்புப் பணியில் ஈடுபட்டு, இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளிகள் அனைவரையும் உயிருடன் மீட்டனர்.
அதன்பிறகு மீட்கப்பட்ட தொழிலாளிகள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் சுப்ராந்த் குமார் சுக்லா தகவல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தால் படுகாயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 2.5 லட்சமும், சிறு காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என வடகிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனிடையே, இந்த விபத்துக்கான காரணத்தை ஆராய மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை நேற்று (ஜன.12) அமைத்துள்ளது வடகிழக்கு ரயில்வே. இதில் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு தலைமை பொறியாளர், கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர், ரயில்வே பாதுகாப்பு படையின் தலைமை பாதுகாப்பு ஆணையர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.