கடந்த சில நாட்களாக மஹசி மக்களை அச்சுறுத்து வந்த ஓநாய்களைப் பிடிக்க உ.பி. வனத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொண்டு வரும் வேளையில், 3 வயது குழந்தையை ஓநாய் தூக்கிச் சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தின் மஹசி தாலுகாவைச் சேர்ந்த வனப்பகுதியில் இருந்த 6 ஓநாய்கள் கடந்த சில வாரங்களாக அந்த வனப்பகுதியைச் சுற்றியிருந்த கிராமங்களில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தியும், தாக்கியும் வந்தன. ஓநாய்களின் தாக்குதலில் கடந்த ஆகஸ்ட் 29 வரை 7 பேர் மரணமடைந்துள்ளனர்.
மஹசி மக்களின் புகாரை அடுத்து உ.பி. வனத்துறையினர் `ஆபரேஷன் பேடியாவைத்’ தொடங்கி ஓநாய்களைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். இதற்காக ட்ரோன் கேமராக்கள், தெர்மல் மேப்பிங் தொழில்நுட்பங்களை வனத்துறையினர் பயன்படுத்தினார்கள். மேலும் 16 குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டன.
கடந்த வார நிலவரப்படி மக்களை அச்சுறுத்திய 6 ஓநாய்களில் மொத்தம் 4 ஓநாய்களை வனத்துறையினர் பிடித்தனர். ஆனால் மீதமுள்ள 2 ஓநாய்களைக் பிடிக்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த 2 ஓநாய்களும் அதன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பதால் அவற்றைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (செப்.02) அதிகாலை 3.30 மணி அளவில் மஹசி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமம் ஒன்றில் வீடு புகுந்து, 3 வயது பெண் குழந்தையை ஓநாய் கொன்றுள்ளது.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த சம்மந்தப்பட்ட கிராமத்தினர், `ஓநாய்களை நாங்கள் பல முறை பார்த்தோம். ஆனால் அது குறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தால் அவர்கள் வீடியோ ஆதாரத்தைக் கேட்கின்றனர். வீடியோ எடுப்பதற்குள் அவை ஓடிவிடுகின்றன’ என்றனர். குழந்தையின் மரணத்தை அடுத்து ஓநாய்களைப் பிடிக்கும் முயற்சியை வனத்துறையினர் மேலும் துரிதப்படுத்தியுள்ளனர்.