
உத்தர பிரதேசத்தில் சாதி தொடர்புள்ள குறிப்புகளை நீக்க வேண்டும், சாதி சார்ந்த ஊர்வலங்களுக்குத் தடை என்பது உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
உத்தரபிரதேச மாநில அலகாபாத் உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில், காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை, பறிமுதல் அறிக்கைகள், தகவல் பலகைகள் உள்ளிட்ட அரசு சார்ந்த இடங்களில் சாதியைக் குறிப்பிடும் சொற்கள் நீக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. சாதிய பெருமிதம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதும் அதன் மூலம் குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் 21 அன்று அம்மாநில உள்துறை அமைச்சகம் காவல்துறைக்கு உயர்நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதன் அடுத்தகட்டமாக காவல்துறை கோப்புகள், அரசு அறிக்கைகள், வாகனங்கள் மற்றும் பொது வெளிகளில் சாதிக் குறியீடுகளை நீக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலர் தீபக் குமார் சுற்றறிக்கை வெளியிட்டார். அதில் முக்கியமாக,
”சாதிப் பெயர், சாதிய கோஷங்களை வாகனத்தில் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும். சாதிய அடையாளங்களை பெருமைப்படுத்தும் பலகைகளை கிராமங்களின் பொதுவெளியில் இருந்து அகற்றப்பட வேண்டும். சாதி சார்ந்த ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் கோப்புகளில் சாதிய பெயர்களுக்குப் பதில் பெற்றோர் பெயரை அடையாளமாக குறிப்பிட வேண்டும். ஆனால், சாதிய வன்கொடுமை வழக்குகளில் மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசின் உத்தரவை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ”மக்கள் மனதில் 5,000 ஆண்டுகளாக வேரூன்றிய சாதி சார்புகளை அகற்ற என்ன செய்யப்போகிறீர்கள்? உடை, சின்னங்கள் அல்லது ஒருவரின் பெயருக்கு முன் சாதியைக் கேட்கும் மனநிலை மூலம் ஏற்படும் பாகுபாடுகளை எப்படி அகற்றுவது? சாதி காரணமாக இழிவுபடுத்துவதும், பொய்யான குற்றச்சாட்டுகளால் அவதூறு செய்வதையும் எந்த நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.