கடந்த ஜூன் 13-ல் கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மீது பதியப்பட்ட போக்சோ வழக்கில் பிணையில் வர முடியாத பிடிவாரண்டை பெங்களூரு நீதிமன்றம் பிறப்பித்தது.
இந்த செய்தி நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், `போலீஸ் விசாரணைக்கு ஜூன் 17-ல் ஆஜராவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்' எனக் கூறி அவர் மீதான பிடிவாரண்டை நிறுத்தி வைப்பதாக கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
`எல்லோருக்கும் இங்கே அனைத்தும் தெரியும். நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனக்கு நீதி கிடைக்கும். ஜூன் 17-ல் நான் விசாரணைக்கு ஆஜராக உள்ளேன். இந்த வழக்கால் தேவையில்லாத குழப்பம் உருவாகியுள்ளது’ எனத் தன் மீது தொடுக்கப்பட்டுள்ள போக்சோ வழக்கு குறித்து எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து ஊடகங்களிடம் பேசிய கர்நாடகா பாஜக தலைவர்கள், `எங்கள் தலைவருக்கு எதிரான அரசியல் சதியை காங்கிரஸ் அரசு திட்டமிட்டு மேற்கொண்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக பல சக்திகள் அவருக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் அரசு இந்த வழக்கைத் தவறாக வழிநடத்திவருகிறது, அவர்கள் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளனர்.
எடியூரப்பா தன் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் தாயார் கடந்த மார்ச் மாதத்தில் பெங்களூரில் உள்ள சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, கர்நாடக மாநில குற்றவியல் விசாரணைத் துறை (சிஐடி) இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமியின் அண்ணன் நீதிமன்றத்தில் எடியூரப்பாவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.