உன்னாவ் பாலியல் வழக்கு: குல்தீப் செங்கருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Unnao Rape Case |

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறுகையில், "எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. உச்ச நீதிமன்றத்துக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்."
Unnao rape case: SC stays Delhi HC's decision allowing suspension of Sengar's life sentence
ஜனவரி கடைசி வாரத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.
2 min read

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2019-ல் விசாரணை நீதிமன்றத்தால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது 2017-ல்.

குல்தீப் செங்கர் பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும், பெண்ணின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டிலும் இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

விசாரணை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் குல்தீப் செங்கர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் குல்தீப் செங்கரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து தில்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது. 7 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்களை இவர் ஏற்கெனவே சிறையில் கழித்துவிட்டதாகச் சொல்லி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், குல்தீப் செங்கருக்குப் பிணை வழங்கியும் தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையைக் கொலை செய்த வழக்கில் சிறையில் இருப்பதால், இவரால் உடனடியாக வெளியில் வர முடியாத நிலை இருந்தது.

தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சிபிஐ தரப்பிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. குல்தீப் செங்கரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்த தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவியை வழங்கிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறுகையில், "எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. உச்ச நீதிமன்றத்துக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்" என்றார் அவர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக பதில் மனுவைத் தாக்கல் செய்யக்கோரி குல்தீப் செங்கருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி கடைசி வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

Summary

The Supreme Court on Monday ordered a stay on the Delhi High Court's order allowing suspension of 2017 Unnao rape convict Kuldeep Sengar's life sentence and granting him bail.

Supreme Court | Unnao Rape Case | Kuldeep Singh Sengar | Delhi High Court | CBI |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in