

நெடுஞ்சாலைகளில் ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளின் விவரங்கள் அடங்கிய அறிவிப்புப் பலகைகள் விரைவில் நிறுவப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் திட்ட விவரங்கள் அடங்கிய அறிவிப்புப் பலகைகள் நிறுவப்படும் என்று கடந்த அக்டோபர் 3 அன்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. அதில், நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் எளிதில் ஸ்கேன் செய்யும் வகையில் கியூஆர் கோடுடன் கூடிய அறிவிப்புப் பலகைகள் அமைக்கப்படும். அதில், தேசிய நெடுஞ்சாலை எண், திட்டத்தின் அளவு, கட்டமைப்பு மற்றும் பராமரிப்பின் கால அளவுகள், நெடுஞ்சாலை ரோந்து காவலர்களின் தொடர்பு எண்கள், அவசர கால உதவி எண்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். திட்டம் குறித்த தரவுகளுடன் நெடுஞ்சாலைகளில் மருத்துவமனை, பெட்ரோல் பங்குகள், கழிவறைகள், உணவு விடுதிகள், காவல்நிலையங்கள் போன்றவை உள்ள இடங்களின் தகவல்களும் வழங்கப்படும். இதன்மூலம் அடிப்படை வசதிகள் குறித்த தகவல்களை மக்கள் பெறுவதுடன் சாலை பாதுகாப்பை மேம்படுத்தி வாகன ஓட்டிகள் அவசகர கால உதவிகளை எளிதில் அடைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று (அக்.28) தில்லியில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இதனை உறுதிப்படுத்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
”தேசிய நெடுஞ்சாலைகளில் விரைவில் திட்ட விவரங்கள் அடங்கிய கியூஆர் கோடுகளுடன் கூடிய அறிவிப்புப் பலகைகள் நிறுவப்படும். சாலைகளில் பயணிக்கும் மக்கள் அனைவருக்கும் அமைச்சர் யார்? செயலர் யார்? அவர்களது தொடர்பு எண்கள் என்ன? ஒப்பந்ததாரர் யார்? செயல் பொறியாளர் யார்? அவர்களது தொடர்பு எண்கள் என்ன ஆகிய விவரங்கள் தெரிய வேண்டும். அப்போதுதான் யார் சாலைகளை அமைத்தார்கள், யார் மேற்பார்வை செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
சாலைத் திட்டங்களின் ஒப்பந்ததாரர், ஆலோசகர்கள், செயலர்கள் உட்பட அனைவரது படங்களும் அதில் வெளியிடப்படும். சமூக ஊடகங்களில் சாலைகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு நான் மட்டும் ஏன் பதிலளித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதால் அனைவரது தகவல்களையும் பொதுவில் வெளியாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இனி தவறு செய்பவர்கள் மக்களிடமிருந்து தக்க பதிலடியைப் பெறுவார்கள். இந்த நடவடிக்கை உட்கட்டமைப்பு மேம்பாடுகளில் பொது பொறுப்புணர்ச்சி மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. திறன்மிக்க சாலைகளின் வருங்காலம் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் மீள்தன்மையின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.
மத்திய அரசு உலகத்தரம் வாய்ந்த சாலைகளைக் கட்டமைப்பதில் கவனம் கொண்டுள்ளது. இதனால் தற்போதைய சுங்கச்சாவடி வருமானமான ரூ. 55,000 கோடியை விட அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுங்கச்சாவடி வசூல் இருமடங்காக உயரும். மேலும் 2027 முதல் 80 லட்சம் டன் பிளாஸ்டிக்கை சாலைகளில் பயன்படுத்துதல், சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தண்ணீரைச் சாலை கட்டுமானங்களுக்குப் பயன்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன” என்றார்.
Union Road Transport and Highways Minister Nitin Gadkari said that commuters on national highways will soon be able to access all necessary details of contractors and concerned officers, including their names, addresses, and mobile numbers, as QR codes.